தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கரோனா இரண்டாம் அலை உச்சத்தை தொட்டுவருகிறது. முதலில் சென்னை, திருவள்ளுர் உள்ளிட்ட மாவட்டங்களில் கரோனா பரவல் அதிகரித்தது. அது சற்று கட்டுக்குள் வர கோவை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் கரோனா இரண்டாம் அலை உச்சத்தைத் தொட்டுவருகிறது. மே 7ஆம் தேதி அமைந்த புதிய தமிழ்நாடு அரசு மே 10ஆம் தேதி முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அமல்படுத்தியது. அதன்பிற்கு கடந்த இரண்டு வாரங்களாக முழு ஊரடங்கை அமல்படுத்தியது. தற்போது சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் தொற்று பரவலின் எண்ணிக்கை குறைந்துவருவதால், மீண்டும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்து முழு ஊரடங்கிலும், டாஸ்மாக் திறக்காததால், மது அருந்துவோர், அதிக விலை கொடுத்து கள்ளச்சந்தையில் மது வாங்கிவருகின்றனர். இதற்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து மது பாட்டில்கள் கடத்திவரப்படுவதும், அதனை காவல்துறையினர் பறிமுதல் செய்து வழக்குப் பதிவுசெய்வதும் தொடர்ந்து நடந்துவருகிறது.
இது ஒருபக்கம் இருக்க, பல இடங்களில் தற்போது சாராயம் காய்ச்சிவருகின்றனர். இதனைக் கண்டறிந்து தமிழ்நாடு காவல்துறை நடவடிக்கை எடுத்துவருகிறது. அந்தவகையில், நேற்று (06.06.2021) உளுந்தூர்பேட்டை அருகே புகைப்பட்டி கிராமத்தில் ஏழுமலை என்பவர், தனது வீட்டில் குக்கரில் சாராயம் காய்ச்சியுள்ளார். இதுகுறித்து அப்பகுதி காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதனைத் தொடர்ந்து அங்குச் சென்ற காவல்துறையினர், அவரது வீட்டை சோதனை செய்தபோது, அவர் வீட்டில் சாராயம் காய்ச்சியது உறுதிப்படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஏழுமலையை போலீசார் கைது செய்தனர்.