ஈரோடு மாவட்டம் தாளவாடி பகுதிகளில் கடந்த சில மாதங்களாக தொடர் திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக கோவில்களில் திருடுவதும் இருசக்கர வாகனங்களை திருடுவதும் தொடர்கதையாகி வருகிறது. கடந்த மாதம் தாளவாடி அடுத்த தொட்டகாஞ்சனூர் கிராமத்தில் உள்ள லட்சுமி கோவிலுக்குள் நுழைந்த திருடன் உண்டியலில் உள்ள பணத்தை திருட முயற்சி செய்துள்ளான். அதேபோல கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஜோரக்காடு கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ரங்கநாதர் கோவிலுக்குள் இரண்டு நபர்கள் நுழைந்து உண்டியல் உள்ள பணத்தை திருட முயற்சி செய்துள்ளனர்.
இந்த காட்சிகள் அனைத்தும் அங்கு பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவாகியுள்ளது. அதேபோல கடந்த இரண்டு மாதத்தில் மட்டும் தாளவாடி, அண்ணாநகர், கரளவாடி போன்ற பகுதிகளில் 4 மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் திருடப்பட்டுள்ளது. மற்றும் தாளவாடி, பாரதிபுரம்,சேஷன்நகர் மாதள்ளி,போன்ற கிராமங்களில் விவசாய மின்மோட்டாருக்கு பயன்படுத்தும் மின்மோட்டார் கேபிள்களை திருடி சென்றுள்ளனர்.
குற்றவாளிகளை பிடிக்க தாளவாடி போலீசார் தீவிர முயற்சி மேற்கொண்டு வந்தனர்.இந்நிலையில் நேற்று தாளவாடி அடுத்த ரங்கநாதர் கோவிலில் திருட முயற்சி செய்த தாளவாடி பகுதியைச் சேர்ந்த சிவ அண்ணா என்பவரை தாளவாடி போலீசார் கைது செய்தனர். கடந்த இரண்டு மாதத்தில் 3 இருசக்கர வாகனங்கள் திருட்டு போன வழக்கிலும் சிவ அண்ணாவுக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.