திண்டுக்கல் மாநகராட்சியில் வரி வசூல் செய்த தொகையில் ரூ.4.69 கோடி முறைகேடு நடந்திருப்பது தொடர்பாக பெண் கண்காணிப்பாளர் உள்பட இருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்த மோசடி குறித்து மாவட்ட காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் வரிவசூல் செய்த பணத்தை வங்கியில் செலுத்தாமல் இரண்டு லட்சம் ரூபாய் கையாடல் செய்ததாக இளநிலை உதவியாளர் சரவணன் என்பவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதனைக் கண்காணிக்க தவறிய கண்காணிப்பாளர் சாந்திக்கு கடந்த 5ம் தேதி விளக்கம் கேட்டு மெமோ கொடுக்கப்பட்டது.
கடந்த 2021இல் இருந்து தற்போது வரை உள்ள கணக்கு சரிபார்த்த போது 2023 ஜீன் மாதத்தில் இருந்து தற்போது வரை ரூ.4.66 கோடி பணத்தை சரவணன் கையாடல் செய்தது தெரிய வந்தது. மாநகராட்சி வரி வசூல் வங்கியில் செலுத்தியதை கண்காணிக்க தவறிய கண்காணிப்பாளர் சாந்தி, இளநிலை உதவியாளர் சதீஸ் ஆகியோரை திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் தற்காலிக பணிநீக்கம் செய்ய உத்தரவிட்டார். ஆனால் இந்த சரவணனை தந்தை மாநகராட்சியில் பணியாற்றி பணிக்காலத்தில் உயிர் இழந்தார்.
அதைத் தொடர்ந்து தான் கருணை அடிப்படையில்தான் சரவணன் பணியில் நியமனம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதொடர்பாக திண்டுக்கல் மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் மாநகராட்சி நிர்வாகம் தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த முறைகேடு தொடர்பாக கண்காணிப்பாளர் சாந்தி மற்றும் இளநிலை உதவியாளர் சதீஷ் ஆகியோரை மாநகராட்சி கமிஷ்னர் பணியிடை நீக்கம் செய்து அதிரடியாக உத்தரவிட்டார்.