கடந்த ஒரு மாதமாக வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. கொரோனா ஊரடங்கு அமலில் இருப்பதால் இந்த வெயிலில் தாக்கத்தில் இருந்து மனிதர்கள் தப்பி இருக்கிறார்கள். ஆனால் வனவிலங்குகள், பறவைகள் வெயிலின் தாக்கத்தை தாக்குப்பிடிக்க முடியாமல் மாண்டு கொண்டிருக்கிறது வருத்தமளிக்கிறது. அதிலும் நாட்டின் தேசியப் பறவையான மயில்கள் சுட்டெரிக்கும் வெயிலை சமாளிக்க முடியாமல் சுருண்டுவிழுந்து பலியாகும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் மயில்களின் சரணாலயம் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை. ஆனால் கடந்த பல வருடங்களாக அங்கு மயில்களுக்கான உணவு, தண்ணீர் வசதிகள் கிடைக்காததால் அங்கிருந்து வெளியேறி அடுத்தடுத்த மாவட்டங்களுக்கும் புலம்பெயர்ந்து விவசாய தோட்டங்களில் இரைதேடிக் கொள்வதுடன் தண்ணீரையும் தேடிக் கொள்கிறது.
தற்போது குளங்களில் தண்ணீர் இல்லை என்ற நிலையில் கடுமையான வெயில் வாட்டுவதால் மயில்கள் தாகம் தணிக்க தண்ணீர் கிடைக்கவில்லை. உணவுக்கும் விவசாயம் இல்லை. அதனால் வெயிலின் கொடுமையால் சுருண்டுவிழுந்து மாண்டு போகும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
இன்று புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள சேந்தன்குடி கிராமத்தில் 3 மயில்கள் அடுத்தடுத்து தள்ளாடி தள்ளாடி சென்று சுருண்டு விழுவதைப் பார்த்த அப்பகுதி இளைஞர்கள் அந்த மயில்களை மீட்டு தண்ணீர், உணவு கொடுத்ததுடன் கால்களில் மஞ்சள் போன்ற முதலுதவி சிகிச்சையும் அளித்தனர். அதில் ஒரு மயில் அங்கிருந்து தப்பிச் சென்று கிணற்றில் விழுந்துவிட்டது. மற்ற இரு மயில்களும் நடக்க முடியாமல் அதே இடத்தில் கிடக்க மாவட்ட வனத்துறை அதிகாரிக்கு தகவல் கொடுக்க அந்த மயில்களை வந்து மீட்டு சிகிச்சை அளித்து சென்றனர் அதிகாரிகள்.
அதேபோல ஆலங்குடி அருகில் உள்ள வேங்கிடகுளம் கிராமத்தில் ஒரு மயில் சுருண்டு விழுந்து கிடந்த தகவல் அறிந்து வனத்துறை அதிகாரிகள் அந்த மயிலையும் மீட்டு சிகிச்சை அளித்துள்ளனர். இப்படி தினசரி சில சம்பவங்கள் நடந்து கொண்டிருப்பதால் வேதனையாக உள்ளது.
இதுகுறித்து இளைஞர்கள் கூறும்போது, மயில்களின் சரணாலயத்தில் அதற்கான ஏற்பாடுகள் இல்லை என்பதால் அங்கிருந்து இரைதேடி வெளியேறிய மயில்கள் உணவு, தண்ணீர் கிடைக்கும் கிராமங்களில் தங்கிவிட்டது. இப்படித் தான் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலும் தங்கியுள்ளது. தங்கியுள்ள பகுதிகளில் தற்போது தண்ணீர் கிடைக்காமல் இரை கிடைக்காமல் அவதிப்படும் மயில்கள் வெயிலை தாங்க முடியாமல் சுருண்டு விழுகிறது. இதனை பயன்படுத்தி நாய்கள் ஒரு பக்கமும் வேட்டைக்காரர்கள் மறுபக்கமும் வேட்டையாடி கொல்கிறார்கள். அல்லது பசிக் கொடுமையாலேயே நம் தேசிய பறவை மடிந்துவிழுகிறது. அழிந்து வரும் மயில்களின் தேசியப் பறவைகளை காக்கவும், மற்ற பறவைகள், வன விலங்குகளை காக்கவும் அவற்றிக்கு தேவையான உணவு தண்ணீர் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் இந்த கோடை காலம் முடியும் முன்பே மயில்கள், பறவைகள் ஏராளம் அழிந்திருக்கும் என்றனர் வேதனையோடு.
காப்பாற்ற அரசு முன்வரலாம்..