பரந்தூர் விமான நிலையத்திற்கு மேலும் 147.11 ஏக்கர் நிலம் கையகப்படுத்துவதற்கான அனுமதி ஆணை தற்போது வெளியாகி உள்ளது.
சென்னையின் இரண்டாவது விமான நிலையமாக காஞ்சிபுரம் பரந்தூரில் 5,358 ஏக்கர் பரப்பளவில் மிகப்பெரிய விமான நிலையம் அமைக்கப்படுவதற்கான ஏற்பாடுகளை மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இதற்கான நிலம் எடுக்கும் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த விமான நிலைய பணிக்காக மேலும் ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் உள்ள எடையார்பாக்கம் கிராமத்தில் மேலும் 147.11 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்துவதற்கான அனுமதி ஆணையை தமிழ்நாடு தொழில் முதலீட்டு ஊக்குவிக்கு வர்த்தகத் துறை வெளியிட்டுள்ளது.
ஏற்கனவே இந்த திட்டத்திற்காக பரந்தூர் கிராமங்களைச் சேர்ந்த வளத்தூர், தண்டலூர், சிங்கிலி பாடி, அக்கம்மாப்பாக்கம், ஏகனாபுரம் உள்ளிட்ட 12 கிராமங்களில் நிலத்தை கையகப்படுத்துவதற்கான அளவீடுகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்நிலையில் நீர்நிலைகள் மற்றும் தரிசு நிலங்களை தவிர்த்து குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்களை கையகப்படுத்துவதற்கான முயற்சியில் வருவாய்த்துறை ஈடுபட்டுள்ளது. இது தொடர்பாக ஆட்சேபனை அல்லது கோரிக்கைகளை 30 நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. பரந்தூர் விமான நிலையத்தை எதிர்த்து பல்வேறு கிராம மக்கள் போராடி வருவது குறிப்பிடத்தக்கது.