அம்மா உணவகங்கள் மூலம் இட்லி, பொங்கல், சாம்பார் சாதம், எலுமிச்சை சாதம், தயிர் சாதம், கருவேப்பிலை சாதம், சப்பாத்தி போன்ற உணவுகள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. அதன்படி சென்னை மாநகராட்சி சார்பில் குறைந்த விலைக்கு உணவு வழங்குவதால் ஆண்டுக்கு ரூ.140 கோடி செலவாகிறது. இத்தகைய சூழலில்தான் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட அம்மா உணவகங்களை புதுப்பொலிவாக்கி, ருசியான புதிய உணவுகளை வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல் வெளியாகி இருந்தது.
இந்நிலையில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் சென்னையில் உள்ள 399 அம்மா உணவகங்களின் கட்டமைப்பை மேம்படுத்தும் பணிகளை சென்னை மாநகராட்சி தொடங்கியது. அதன்படி அம்மா உணவகங்கள் அமைந்துள்ள கட்டடங்களை சீரமைக்கவும், பெயிண்டிங் வேலை செய்யவும், பழுதான பிரிஜ், கிரைண்டர், மிக்ஸி உள்ளிட்ட இயந்திரங்களை மாற்றவும் மண்டல அதிகாரிகளுக்கு சென்னை மாநகராட்சி சார்பாக உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்கான நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அதிக வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் ருசியான புதிய உணவு வகைகளை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கான உத்தரவை சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் பிறப்பித்துள்ளார்.