பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்திய கிடுகு திரைப்படத்தின் இயக்குநர் வீர முருகன், நாதுராம் கோட்சே என்ற திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். ஏற்கெனவே இந்த இயக்குனர் எடுத்த கிடுகு திரைப்படத்தில், வேளாங்கண்ணி மாதா கோயில், முன்பு இந்துக் கோயிலாக இருந்தது எனவும், தற்போது அங்கு மதமாற்றம் தீவிரமாக நடக்கிறது எனப் பல்வேறு சலசலப்பை இந்தத் திரைப்படத்தில் பதிவு செய்து பீதியைக் கிளப்பியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல், இந்தப் படத்தில், சங்கி, நீட், காடுவெட்டி, ஆணவக்கொலை, திராவிட மாடல், விடுதலை சிறுத்தை, சாத்தான்குளம் என எக்கச்சக்கமான குறியீடுகள் காட்டப்பட்டிருப்பதாக மிகப்பெரும் சர்ச்சை கிளம்பியது.
முற்போக்கு அரசியல் பேசும் பலரையும் கடுமையாக விமர்சிக்கும் இந்தப் படத்தில், இந்து அறநிலையத்துறை அரசிடம் இருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை பேசியிருந்ததால் இந்தப் படத்தை வெளியிடுவதில் மிகப்பெரும் சர்ச்சை ஏற்பட்டது. அதன் பிறகு ஒரு வழியாக யூடியூப் சேனல் ஒன்றில் இந்தப் படத்தினை வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில், இந்த இயக்குநர் தனது இரண்டாவது படத்தை இயக்கியிருக்கிறார். இதற்கான படப்பிடிப்புகள் பெரும்பாலும் முடிந்துவிட்டதாக சொல்லப்படும் வேளையில், மதுரையில், இந்தத் திரைப்படத்தின் டீசர் வெளியீடு நடந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் கலந்துகொண்டுள்ளார்.
மேலும், படத்தில் நடித்த திரைக்கலைஞர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
அப்போது, நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றிய அர்ஜூன் சம்பத், செய்தியாளர்களை சந்தித்த போது, கிடுகு திரைப்படத்தை தயாரித்து, பல்வேறு எதிர்ப்புகள் மற்றும் அடக்குமுறைகளுக்கு மத்தியிலே, அதை யூட்டியூப்பில் வெளியிட்டு, உலகெங்கும் இருக்கக் கூடிய தமிழ் ரசிகப் பெருமக்களின் பேராதரவைப் பெற்ற அந்தப் படக் குழுவினருக்குப் பாராட்டு விழா நடத்துவதாகவும், கிடுகு திரைப்படத்தில் திராவிட இயக்கங்களின் முகத் திரையை கிழித்து மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காண்பித்ததால் இந்தப் பாராட்டு விழா என்றும் கூறியிருக்கிறார். மேலும், இவர்களின் அடுத்த தயாரிப்பான நாதுராம் கோட்சே திரைப்படத்தின் டிரெய்லரும் இன்று வெளியிடப்பட்டுள்ளது. கிடுகு திரைப்படம் வெளியீட்டிற்கு எப்படி இந்து மக்கள் கட்சி துணை நின்றதோ அது போல் நாதுராம் கோட்சே திரைப்படத்திற்கும் இந்து மக்கள் கட்சி ஆதரவு அளிக்கிறது. இந்தத் திரைப்படத்தில் தமிழகம் மட்டும் அல்ல, இந்தியா முழுவதும் இந்துக்கள் பாதிக்கப்படுவது தொடர்பான கருத்துகள் இடம் பெற்று இருக்கின்றன. ஏழு எட்டு மொழிகளில் இந்தப் படத்தை தயாரித்து இருக்கிறார்கள். எனவே இந்தத் திரைப்படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைய வேண்டும் எனவும் கூறியிருக்கிறார்.
அதுமட்டுமல்லாமல், இந்தத் திரைப்படம் திமுக அரசின் அச்சுறுத்தலால் திரை அரங்குகளில் வெளியிடப்படாமல் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட இருக்கிறது எனவும் கூறியிருக்கிறார். மேலும், தொடர்ந்து பேசிய அர்ஜூன் சம்பத், ஜல்லிக்கட்டு அரங்கிற்கு கலைஞர் பெயரை வைப்பது எதற்காக? எனவும், கலைஞருக்கும் ஜல்லிக்கட்டிற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், அந்த வளாகத்தில் தீரன் சத்தியமூர்த்தி சிலை கலைஞரின் காலடியில் இருப்பது போல கலைஞருக்கு மிகப் பெரிய சிலை வைத்துள்ளார்கள் என்றும் குற்றம் சாட்டியிருக்கிறார்.
மேலும் தொடர்ந்து பேசியவர், திமுக ஆட்சி செய்யும் போது எல்லா இடத்திலும், கலைஞரின் சிலை, தந்தை பெரியாரின் சிலை போன்றவற்றை வைத்து, தமிழ்நாட்டில் இந்துக்களை ஒழித்துக் கட்டுவதற்கு முயற்சி செய்வதாகவும், தமிழ்நாட்டில் தேசியத் தலைவர்களின் முக்கியத்துவத்தை குறைக்கும் வண்ணமும் இவ்வாறு திட்டமிட்டு செய்வதாக கூறியிருக்கிறார். இதனால், இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத்தின் கருத்திற்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறும்போது, இந்தியா முழுக்க படித்த பட்டதாரிகள் பலர் வேலையில்லாமல் வெளி நாடுகளுக்கு சென்று மிகவும் சிரமப்படும் வேளையில், இது போன்று மத கலவரத்தை உண்டு செய்யும் படங்களை எடுத்து தமிழகத்தில் கலவரம் செய்ய விழைகிறார்கள் என்று குற்றம் சாட்டியுள்ளனர்.