மன்னார்குடி அருகே காலாவதியான துறப்பன எண்ணெய் ஆழ்குழாய் கிணற்றை மீண்டும் திறக்க முயற்சிக்கும் ஓ.என்.ஜி.சி நிர்வாக அதிகாரிகளைக் கண்டித்து 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு தமிழகம் மற்றும் புதுச்சேரியில், காவிரி டெல்டா மாவட்டங்களில் 388 இடங்களிலும் ஹைட்ரோ கார்பன் திட்ட எண்ணெய் கிணறுகள் அமைக்க மத்திய அரசு வேதாந்தா நிறுவனத்திற்கும், ஒ.என்.ஜி.சி நிறுவனத்திற்கும், ரிலையன்ஸ் நிறுவனத்திற்கும் அனுமதி வழங்கியது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள், அரசியல் கட்சிகள், விவசாய சங்கத்தினர், பொதுமக்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை அறிந்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, காவிரி டெல்டா மாவட்டத்தைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து, ‘விவசாயத்தைச் சீரழிக்கும் எந்தத் திட்டத்தையும் தமிழகத்தில் இனிவரும் காலங்களில் அனுமதிக்க மாட்டோம்’ எனத் தெரிவித்தார். இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே அரிச்சபுரம் கிராமத்தில் எட்டு ஆண்டுகளுக்கு முன்பாக ஒ.என்.சி.ஜி நிறுவனம் எண்ணெய் எடுக்கும் பணியில் ஈடுபட்டது.
ஆனால் அந்த எண்ணெய் துறப்பன கிணறுகள் காலாவதியாகிவிட்டதாக கூறிவிட்டு, பணிகளை நிறுத்திவிட்டு பாதியிலேயே சென்றுள்ளது. இந்நிலையில் மீண்டும் அதே இடத்தில் திடீரென இரவோடு இரவாக ஒ.என்.சி.ஜி நிறுவனம் எண்ணெய் எடுப்பதற்காகப் பல்வேறு உபகரண பொருட்களைக் கொண்டு வந்து இறக்கியிருப்பதைப் பார்த்த அப்பகுதி கிராம மக்கள், விவசாயிகள், பெண்கள் ஆகிய 200க்கு மேற்பட்டோர் தங்கள் குழந்தைகளுடன் மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து கண்டன முழக்கங்கள் எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்திற்கு வந்த ஒ.என்.ஜி.சி நிர்வாக அதிகாரிகள் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு 10 நாட்களுக்குள் இந்தப் பணியை நிறுத்திவிடுகிறோம் என உறுதியளித்ததன் அடிப்படையில் போராட்டத்தைக் கைவிட்டுள்ளனர்.
போராட்டத்தில் கலந்துகொண்ட சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி. ராஜா கூறுகையில், "இந்த இடத்தில் எந்தப் பணியைத் தொடங்கினாலும், இப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகளின் கருத்தைக் கேட்ட பின்புதான் இந்த இடத்தில் கால்பதிக்க வேண்டும். அதுவரையிலும் எந்த உபகரன பொருட்களும் இங்கு வரக்கூடாது. மீறினால் இதனைக் கண்டித்து மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும். இதை மத்திய மாநில அரசுகள் புரிந்துகொள்ள வேண்டும்," என எச்சரிக்கை விடுத்துப் பேசினார்.