திருவாரூர் அருகே அனுமதியின்றி ஓ.என்.ஜி.சி புதிய எண்ணை கிணறுகளை அடுத்தடுத்த இடங்களில் அமைக்கப்படுவதால் அந்தப்பணியை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு நிலத்தின் உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

திருவாரூரை சுற்றி பல கிராமங்களில் ஓ.என்.ஜி.சி நிறுவனம் கிணறுகள் அமைத்து கச்சா எண்ணெய் எடுத்து வருகிறது. திருவாரூர் நகரத்தை சுற்றி உள்ள கிராமங்களில் மட்டும் 21 எண்ணெய்க் கிணறுகள் அருகருகே இருந்து மக்களை அச்சுறுத்திவருகின்றன.
அந்த வகையில் நடராஜன் என்பவருக்குச் சொந்தமான இரண்டு ஏக்கர் நிலத்தில் 20 ஆண்டுகளுக்கு முன்பு ஓ.என்.ஜி.சி நிறுவனம் திருவாரூர் பகுதியில் கால்பதித்த சமயத்தில் எண்ணெய் கிணறுகள் அமைக்க ஒப்பந்தம் போட்டு கச்சா எண்ணெய் எடுத்து வருகிறது. அவரது இடத்திலேயே அதற்கு அருகில் எந்தவொரு புதிய அனுமதியும் வாங்காமல் மற்றொரு கிணற்றையும் அமைத்து கச்சா எண்ணை எடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு மூன்றாவது எண்ணெய்க் கிணறை அதே பகுதியில் அமைக்க அதற்கான பூர்வாங்க பணிகளை தொடங்கி வருகின்றனர். அதோடு நடராஜனின் சகோதரர் அமிர்தகழி என்பவருக்கு சொந்தமான நிலத்தையும், அவரிடம் எந்தவித அனுமதி இல்லாமல் பணிகள் துவங்க, மண்ணை கொட்டி வயலை சமன் படுத்தும் பணிகளை செய்துவருகின்றனர். இடத்தின் உரிமையாளர்கள் பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும், ஒப்பந்தத்தை மீறி புதிய கிணறுகள் அமைப்பதை நிறுத்த வேண்டும் என ஓ.என்.ஜி.சி அதிகாரிகளிடம் கேட்டபோது. அவர்களோ பணியை நிறுத்த முடியாது, நீங்கள் முடிந்தால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து கொள்ளுங்கள், நாங்களும் வழக்கு தொடர்வோம் என ஓஎன்ஜிசி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழக முதல்வர் திருவாரூர் மாவட்டம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்த நிலையில் ஓ.என்.ஜி.சி நிறுவனத்தினர் புதிய கிணறு அமைப்பது நியாயமில்லை. இதனை தமிழக அரசு உடனடியாக தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த நிறுவனத்தை உடனே அகற்ற வேண்டும். நிலத்தை மீண்டும் விவசாய பணிக்கு பெற்றுத் தர வேண்டும்," என கோரிக்கை விடுத்துள்ளனர்.