திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி கோணமேடு அடுத்த வி.எஸ்.கே காலனி பகுதியில் அம்மன் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பூங்கரகம் ஊர்வலமாக வந்து கொண்டிருந்தபோது கோணமேடு மற்றும் காமராஜர் நகர் பகுதி சில இளைஞர்களிடையே நடனம் ஆடுவதில் ஏற்பட்ட தகராறில் காமராஜ்புரம் பகுதியைச் சேர்ந்த மேளம் அடிக்கும் தொழிலாளி இளைஞர் சந்துரு(18) என்பவர் மர்ம நபர்களால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். இது குறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி நகர போலீசார் பிரேதத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் சந்துருவைக் குத்தி கொலை செய்த நபர்களைக் கைது செய்யக் கோரி காமராஜ் நகர் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் சந்துருவின் உறவினர்கள் கோணமேடு பகுதியில் ஆட்டோ, இருசக்கர வாகனங்கள் மற்றும் வீட்டின் கண்ணாடிகளை அடித்து உடைத்து நொறுக்கியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதேபோல் ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்களை அடித்து நொறுக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கோணமேடு பகுதி இளைஞர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் காவல்துறையினர் என்ன செய்வது அறியாமல் திகைத்து நின்றனர்.
பின்னர் இது குறித்து தகவல் அறிந்து வந்த மாவட்ட எஸ்.பி.ஸ்ரேயா குப்தா தலைமையிலான ஆம்பூர் வாணியம்பாடி திருப்பத்தூர் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.