தனது மகன் வீட்டை அபகரித்துவிட்டு வெளியே அனுப்பிவிட்டதாக மூதாட்டி ஒருவர் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கண்ணீர் மல்கப் புகார் அளித்துள்ளார்.
ஈரோடு திருநகர் காலனியில் 4வது வீதியைச் சேர்ந்தவர் 69 வயதான மூதாட்டி திலகவதி. இவரது கணவர் சிவஞானம் இறந்துவிட்ட நிலையில், இரு மகன்களுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் தனக்குச் சொந்தமான வீட்டை அபகரித்துக்கொண்டு தன்னை வெளியே அனுப்பிவிட்டதாக ஆட்சியர் அலுவலகத்தில் கண்ணீர் மல்கப் புகார் மனு அளித்துள்ளார்.
அந்த மனுவில், “எனக்குச் சொந்தமான வீடு எனது பெயரில் உள்ளது. அதில் எனது மூத்த மகன் மற்றும் அவரது குடும்பத்தினர் கீழ்த் தளத்திலும், இளைய மகன் மற்றும் அவரது குடும்பத்தினர் முதல் தளத்திலும் தங்கி இருந்தனர். நான் வீட்டின் ஒரு பகுதியில் குடியிருந்து வருகிறேன். எனக்கு முதுமை காரணமாக அடிக்கடி உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருகிறேன். என்னை என் மகன்கள் சரியாகக் கவனிக்கவில்லை. என் வீட்டை மகன்கள் சரியாகப் பராமரிக்காததால் கழிவு நீர் சுவரில் இறங்கி கட்டடம் சேதம் அடைந்துவிட்டது.
இந்நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இரு மகன்களையும் எனது வீட்டைக் காலி செய்யுமாறு கூறிவிட்டேன். நான் மேல் தளத்தை வாடகைக்கு விட்டு அதில் வரும் வருமானத்தைக் கொண்டு எனது மீத நாட்களைக் கழித்துக் கொள்கிறேன் என மகன்களிடம் கூறிவிட்டேன். அதனை ஏற்று எனது மூத்த மகன் வீட்டைக் காலி செய்து சென்றுவிட்டான். ஆனால் இளைய மகன் காலி செய்யாமல் இருந்து வருகிறான். இளைய மகன், அவரது மனைவி அடிக்கடி என்னிடம் சண்டை போட்டு வருகிறார்கள். இந்நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு எனக்கு உடல் நலம் சரியில்லாத காரணத்தால் நான் குடியிருந்த கீழ்த் தளத்தை மட்டும் பூட்டிவிட்டு மூத்த மகன் வீட்டிற்குச் சென்றுவிட்டேன். உடல் நலம் சரியான பிறகு செப்டம்பர் 7 ஆம் தேதி மீண்டும் வீட்டுக்கு வந்தபோது, எனது பூட்டு உடைக்கப்பட்டு புது பூட்டுப் போடப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தேன்.
இது குறித்து எனது இளைய மகன் மற்றும் அவரது மனைவியிடம் கேட்டபோது, அவர்கள் என்னைக் கடுமையாகத் திட்டிவிட்டு இது எனது வீடு நீ வீட்டை விட்டு வெளியேறு என்று கூறிவிட்டனர். இது குறித்து கருங்கல்பாளையம் போலீஸ் நிலையத்தில் நான் புகார் அளித்தேன். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்திலும் புகார் அளித்தேன். இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. வயது முதிர்வு காரணமாக என்னால் சரியாக நடக்கக்கூட முடியவில்லை. எனக்குச் சொந்தமான வீட்டில் கீழ்த் தளத்தில் நான் குடியிருந்து கொண்டு மேல் தளத்தை வாடகைக்கு விட்டு அதில் வரும் பணத்தில் பிழைப்பு நடத்தலாம் என்று எண்ணிக் கொண்டிருந்தபோது, எனது இளைய மகனும் அவரது மனைவியும் எனது வீட்டை அபகரித்து எனது சொத்தையும் அபகரிக்க முயற்சிக்கிறார்கள். எனக்கு வேறு எந்த வருமானமும் கிடையாது. இந்த வீடு மட்டுமே எனக்கு ஜீவனாம்சம். தற்போது ஒரு மாதமாக நண்பர் வீட்டில் வசித்து வருகிறேன். எனவே தாங்கள் இந்த விஷயத்தில் தலையிட்டு எனக்கு வீட்டை மீட்டுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.