திருப்பத்தூரில் தலையணையால் அமுக்கி மூதாட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அடுத்த பலப்பல்நத்தம் பகுதியைச் சேர்ந்தவர் கோபால். இவரது மனைவி அனுமக்கா (82). கோபால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில் மூதாட்டி அனுமக்கா வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மூதாட்டி நேற்று இரவு வழக்கம் போல் தூங்கச் சென்றவர் காலையில் வீட்டில் இருந்து வெளியில் வராததால் அக்கம்பக்கத்தில் இருந்த உறவினர்கள் சென்று பார்த்த போது, மூதாட்டி முகம் மற்றும் கழுத்து பகுதியில் தலையணை அமுக்கி வைக்கப்பட்டு இறந்த நிலையில் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். ஆலங்காயம் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவலின் பேரில் விரைந்து வந்த ஆலங்காயம் போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சம்பவ இடத்தில் கைரேகை மற்றும் தடயவியல் நிபுணர்கள் மற்றும் வேலூர் சாரா மோப்பநாய் வரவழைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உத்தரவின் பேரில் மாவட்ட குற்றவியல் போலீசார் மற்றும் ஆலங்காயம் காவல்துறையினர் தடயங்களைக் கைப்பற்றி சந்தேகத்தின் பேரில் மூதாட்டியின் உறவினர்கள் ஆறு பேரை காவல் நிலையத்திற்கு அழைத்து கைரேகை பதிவு செய்து அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வீட்டில் தனியாக வசித்து வந்த மூதாட்டி 4 சவரன் நகைகள் அணிந்திருந்ததாக கூறப்படும் நிலையில் நகைக்காக கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என இரு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆலங்காயம் அருகே மூதாட்டி தலையணையால் அமுக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.