Skip to main content

மிக்ஜாம் புயல்; பேரிடர் மீட்பு பணிக்கு வந்த அதிகாரி பலி!

Published on 06/12/2023 | Edited on 06/12/2023

 

The officer who came to the rescue was lost his lives at cyclone michaung

 

மிக்ஜாம் புயல் காரணமாக மூன்றாவது நாளாக பெய்த மழைநீர் இன்றும் சென்னையில் சில இடங்களில் தேங்கி நிற்கிறது. குறிப்பாக அசோக் நகர், அரும்பாக்கம், வேளச்சேரி, பெருங்குடி உள்ளிட்ட பகுதிகளில் தேங்கியுள்ள நீரை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அசோக் நகரில் பாரதிதாசன் காலனி உள் பகுதிகளில், குளம் போல் தண்ணீர் தேங்கியுள்ளது. பல இடங்களில் பால் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. தேசிய பேரிடர் மீட்புப் படையினர் 450 பேர் 18 குழுக்களாக பிரிந்து பல்வேறு இடங்களில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், மழைவெள்ள மீட்பு பணிக்காக சென்னை வந்தபோது மரத்தில் கார் மோதிய விபத்தில் அதிகாரி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

 

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயபால் மூர்த்தி (50). இவர் ராஜபாளையம் நகராட்சியில் துப்புரவு ஆய்வாளராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில், இவர் தனது சக துப்புரவு ஆய்வாளரான பழனிகுரு (50) என்பவருடன் சென்னையில் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணிக்காக அரசு காரில் நேற்று முன் தினம் (04-12-23) ராஜபாளையத்தில் இருந்து புறப்பட்டார். அந்த காரை டிரைவர் முருகானந்தம் என்பவர் ஓட்டி வந்தார். 

 

இதனையடுத்து, அவர்கள் வந்து கொண்டிருந்த கார் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த தனியார் கல்லூரி அருகில் நேற்று காலை 5 மணிக்கு வந்தது. அப்போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரத்தில் இருந்த மரத்தின் மீது பயங்கரமாக மோதியது. இந்த கோர விபத்தில், உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே ஜெயபால் மூர்த்தி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், அவருடன் பயணித்து வந்த பழனிகுரு, முருகானந்தம் ஆகியோர் பலத்த காயமடைந்தனர். 

 

இந்த விபத்தை பற்றி தகவல் அறிந்த விக்கிரவாண்டி காவல்துறையினர் மற்றும் சுங்கச்சாவடி மைய விபத்து பாதுகாப்பு வாகன ஊழியர்கள் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டனர். மேலும், அவர்களை சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அதனை தொடர்ந்து, ஜெயபால் மூர்த்தியின் உடலை கைப்பற்றிய காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

 

 

சார்ந்த செய்திகள்