கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள நத்தக்குளம் பகுதியில் கந்தசாமி பிள்ளை மகள் ரேணுகா என்ற திருநங்கை வசித்து வருகிறார். இவரது வீட்டிற்குச் செல்லும் பாதையை கொசப்பாடி கிராமத்தைச் சேர்ந்த பாலன் என்பவர் ஆக்கிரமித்து, 10 சென்ட் வீட்டு மனை பட்டா இடத்தை அபகரித்து வருவதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாகப் பாலன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கள்ளக்குறிச்சி வருவாய் கோட்டாட்சியர், சங்கராபுரம் வட்டாட்சியர் உள்ளிட்டோரிடம் ரோணுகா புகார் அளித்துள்ளார். ஆனால் புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனைக் கண்டித்து சங்கராபுரம் மும்முனை சந்திப்பில் 20க்கும் மேற்பட்ட திருநங்கைகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது திடீரென மறியலில் ஈட்டுப்பட்டிருந்த திருநங்கைகள் உடலில் மண்ணெண்யை ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றனர். இதனால் அங்குப் பரபரப்பு ஏற்பட்டு, ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த சங்கராபுரம் காவல் ஆய்வாளர் விநாயக முருகன் மற்றும் காவல் உதவி ஆய்வாளர் லோகேஸ்வரன் உள்ளிட்டோர் சாலை மறியலில் ஈட்டுப்பட்ட ரேணுகா உள்ளிட்ட திருநங்கைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பேச்சுவார்த்தையும் சுமுக முடிவு எட்டப்படாததால் திருநங்கைகள் போராட்டத்தைத் தொடர்ந்தனர். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த போராட்டத்தால், அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.