
'பெண்களுக்கு மரியாதை கொடுப்பவராக அமைச்சர் பொன்முடி இருந்தால் அவர் அமைச்சரவையில் இருக்கக்கூடாது' என தமிழிசை சௌந்தரராஜன் கண்டித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், ''தமிழகத்தில் ஒரு மக்கள் விரோத ஆட்சி மட்டுமல்ல பெண்கள் விரோத ஆட்சி நடைபெறுகிறது. பொன்முடி பெண்களைப் பற்றி மிகக் கேவலமாக பேசிவிட்டு கட்சிப் பதவி மட்டும் பறித்தால் போதாது. ஏனென்றால் கட்சிக்கு மட்டும் அவர் பிரதிநிதி அல்ல, ஒரு அமைச்சர் என வரும் பொழுது தமிழக மக்களின் பிரதிநிதி. தமிழக மக்களின் பிரதிநிதி என்றால் ஆண்களுக்கும் பெண்களுக்கும் அவர் பிரதிநிதி. அவர் பெண்களைப் பற்றி இவ்வளவு கேவலமாக பேசும் பொழுது பெண்களின் பிரதிநிதியாக இருப்பதற்கு அவர் தகுதியற்றவர்.
கண் துடைப்பு நாடகமெல்லாம் வேண்டாம் ஸ்டாலின் அவர்களே. பெண்களுக்கு நீங்கள் உண்மையாக மரியாதை கொடுத்தவர்கள் என்றால் பொன்முடி அமைச்சரவையில் இருக்கக் கூடாது. பெண்கள் என்றால் உங்களுக்கு அவ்வளவு சர்வ சாதாரணமாக போய்விடுகிறதா? இன்னொரு அமைச்சர் வேற ஹிந்தியில் பாட்டு பாடுகிறார். எ.வ.வேலு எவ்வளவு கேவலமான வார்த்தைகளை வைத்து இறைவனையும் அதையும் சம்பந்தப்படுத்தி பாடிக் கொண்டு இருக்கிறார். பெண்களைப் பற்றி இப்படித்தான் ஒரு பார்வை பார்த்துக் கொண்டிருப்பீர்கள் என்றால் தமிழக பெண்களிடம் நான் கேட்டுக்கொள்கிறேன் இவர்கள் யாருக்கும் ஒரு ஓட்டுகூட போடக்கூடாது. உங்களை கிள்ளுக் கீரையாக நினைக்கிறார்கள். 'ஓசி பஸ்ல ஜாலியா போவீங்க' என்று கேட்டவர்தான் பொன்முடி. அப்போ மக்கள் மீது இவர்களுக்கு இருக்கும் மரியாதை என்ன என்பதை நாம் பார்த்துக் கொள்ள வேண்டும்'' என்றார்.