மத்திய அரசின் புதிய மோட்டார் வாகன சட்டத்தைக் கண்டித்து நாடு முழுவதும் வியாழக்கிழமை ஒருநாள் நடந்த லாரிகள் வேலைநிறுத்தப் போராட்டத்தால், 100 கோடி ரூபாய் சரக்குகள் தேக்கம் அடைந்தன.
மத்திய அரசு, திருத்தப்பட்ட புதிய மோட்டார் வாகனச் சட்டத்தை நாடு முழுவதும் செப். 1ம் தேதி முதல் அமலுக்குக் கொண்டு வந்தது. இந்த புதிய சட்டத்தின்படி, போக்குவரத்து விதிமீறல்களுக்கு முன்பை விட பல மடங்கு அபராத கட்டணம் மற்றும் வாகனப்பதிவு கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது. இதற்கு நாடு முழுவதும் லாரி அதிபர்களிடையே கடும் எதிர்ப்பு நிலவுகிறது. மேலும், கனரக வாகன டயர்கள் உள்ளிட்ட உதிரி பாகங்கள் விலை ஏற்றம், டீசல் விலை உயர்வு, சுங்கக்கட்டணம் அதிகரிப்பு, இன்சூரன்ஸ் பிரிமீயம உயர்வு உள்ளிட்ட காரணங்களால் லாரி தொழில் கடும் பின்னடைவைச் சந்தித்துள்ளது.
சரக்கு போக்குவரத்தில் லாரிகள் முக்கிய அங்கம் வகிக்கின்றன. தொழில் நசிவு காரணமாக இந்தியா முழுவதும் 15 லட்சம் லாரிகளும், தமிழகத்தில் 2 லட்சம் லாரிகளும் போதிய சரக்குகள் புக்கிங் கிடைக்காததால் வேலையின்றி நிறுத்தப்பட்டு உள்ளன. இதையே நம்பியிருக்கும் 10 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயமும் உள்ளது. இப்படியான சூழலில் மத்திய அரசின் புதிய மோட்டார் வாகனச் சட்டம் லாரி அதிபர்களிடையே பேரிடியாய் இறங்கியுள்ளது. இதையடுத்து மோட்டார் வாகனத் தொழிலை மேம்படுத்த மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தொழில் நசிவுக்குக் காரணமான புதிய சட்டத்திருத்ததை திரும்பப் பெறக்கோரியும் லாரி போக்குவரத்தாளர்கள் சார்பில் நாடு முழுவதும் வியாழக்கிழமை (செப். 19) ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் நடந்தது.
இதனால் இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை நாடு முழுவதும் சுமார் 40 லட்சம் லாரிகள் இயக்கப்படவில்லை. சரக்கு போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. தமிழகத்தில் மட்டும் இன்று 4 லட்சம் லாரிகள் ஓடவில்லை. ஏற்கனவே சரக்குகள் எடுத்துச் செல்லப்பட்ட இடத்திலேயே லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டன. சேலத்தில் செவ்வாய்பேட்டை, லாரி மார்க்கெட், ரயில்வே கூட்ஸ் ஷெட் மற்றும் சங்ககிரி உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. தமிழகத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்குச் செல்ல வேண்டிய ஜவுளிகள், ஜவ்வரிசி, சுண்ணாம்புக்கல், மளிகை பொருள்கள் லாரிகளில் ஏற்றப்படாமல் கிடங்குகளில் தேங்கிக் கிடந்தன. சரக்கு போக்குவரத்து முடங்கியதால் எப்போதும் பரபரப்பாக இருக்கும் செவ்வாய்பேட்டை பஜார் இன்று வெறிச்சோடிக் காணப்பட்டது.
இதுகுறித்து அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் நிர்வாகக்குழு உறுப்பினர் சென்னகேசவன் கூறுகையில், ''ஒருநாள் வேலைநிறுத்தத்தால் நாடு முழுவதும் 100 கோடி ரூபாய் சரக்குகள் தேக்கம் அடைந்துள்ளன. தமிழகத்தில் மட்டும் 10 கோடி ரூபாய் சரக்குகள் தேங்கி இருக்கின்றன. சரக்கு ஏற்றிய லாரிகளும் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இன்று மாலை 6 மணிக்கு மேல் அந்த லாரிகள் இயக்கப்படும். தமிழகத்தில் 85 சதவீத லாரிகள் இயக்கப்படவில்லை,'' என்றார்.