கடந்த 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத் தொடரின் போது தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் 110 விதியின் கீழ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், ‘மதுரை மாவட்டம் மேக்கிப்பட்டியில் உள்ள கீழக்கரை என்ற இடத்தில் ஜல்லிக்கட்டுக்கென பிரம்மாண்டமாக ஒரு மைதானம் உருவாக்கப்படும்’ எனத் தெரிவித்திருந்தார். அதன்படி சுமார் 67 ஏக்கர் பரப்பளவில் 44 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அதிநவீன வசதிகள் கொண்ட ஜல்லிக்கட்டு மைதானம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மதுரை கீழக்கரையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு மைதானத்தை வரும் 24 ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். இதனையொட்டி அன்றைய தினம் அங்கு நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க காளைகள், மாடுபிடி வீரர்கள் முன்பதிவு செய்ய அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே போட்டியில் பங்கேற்க உள்ள மாடுபிடி வீரர்கள் மற்றும் காளையின் உரிமையாளர்கள் http://madurai.nic.in என்ற இணையதளம் மூலம் தங்களது பெயர்களை வரும் 20 ஆம் தேதிக்குள் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
போட்டியில் பங்கேற்க உள்ள மாடுபிடி வீரர்கள், மற்றும் காளையின் உரிமையாளர் நாளை (19.01.2024) நண்பகல் 12 மணி முதல் மற்றும் நாளை மறுநாள் (20.01.2024) நண்பகல் 12 மணி வரை என முன்பதிவு செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாடுபிடி வீரர்கள் உடல் தகுதிச் சான்றுடனும், காளைகளின் உரிமையாளர்கள் மருத்துவச் சான்றுடனும் பதிவு செய்ய வேண்டும். மேலும் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட சான்றுகள் சரிபார்க்கப்பட்ட பின் தகுதியான நபர்கள் மட்டுமே டோக்கன்களை பதிவிறக்கம் செய்ய இயலும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய மைதானத்தில் அரசின் நெறிமுறையை பின்பற்றி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.