'நாம் தமிழர் கட்சி'யின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக அரசியலின் அடுத்த தலைமுறை முகங்களில் ஒருவராகத் திகழ்கிறார். அவரது பேச்சை ரசிக்கும் இளைஞர் கூட்டம் ஒன்று இருக்கிறது. இயக்கமாகத் தொடங்கி அரசியல் கட்சியாக உருப்பெற்று குறிப்பிடத்தக்க இடத்தை அடைந்திருக்கிறது 'நாம் தமிழர் கட்சி'.
தமிழ் சினிமாவில் இயக்குனராகத் தன் பயணத்தைத் தொடங்கிய சீமான், பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றியவர். 'பாஞ்சாலங்குறிச்சி' படம் மூலமாக இயக்குனரான சீமான், தனது 'தம்பி' படத்தின் மூலம் பெரிய கவனமீர்த்தார். 'தம்பி' என்று பிரபாகரனை குறிப்பிடும் பெயர், முழுக்க முழுக்க தமிழ் வசனங்கள், அப்போதைய சமூக பிரச்சனைகளை கையில் எடுத்த கதை, பேரன்பும் பெருங்கோபமும் கொண்ட நாயகன் பாத்திரம் என 'தம்பி'யில் தனது புரட்சி முகத்தை காட்டியிருந்தார் சீமான். அவரது படங்களிலேயே பெரிய வெற்றியை பெற்ற படம் அதுதான்.
அதன் பிறகு அவ்வப்போது சில படங்களில் நடித்த சீமான், 'மாயாண்டி குடும்பத்தார்' படத்தில் ஒரு கிராமத்து சமூக சேவகனாக நடித்திருந்தார். அந்தப் படத்தின் படப்பிடிப்பு சமயத்திலேயே அவரது அரசியல் மேடை பேச்சுக்காகக் கைது செய்யப்பட்டார். இப்படி மெல்ல அவரது பாதை சினிமாவிலிருந்து அரசியலின் பக்கம் திரும்பியது. முன்பே செயல்பாடுகளில் இருந்தாலும் ஈழப்போர் நடந்த சமயத்தில் தீவிரமாக செயல்படத் தொடங்கினார். இன்று சீமானின் பல கருத்துகள், பேச்சுகள் விமர்சனத்துக்கும் கேலிக்கும் உள்ளாகின்றன. மீம்ஸுலகிலும் அவருக்கு முக்கிய இடம் இருக்கிறது. என்றாலும் மறுக்க முடியாத ஒரு இடத்தை அவர் அடைந்திருக்கிறார். தொடர்ந்து தனது இருப்பை தக்கவைத்திருக்கிறார்.
இன்று (08-11-2019) 'நாம் தமிழர் கட்சி'யினருக்கும் சீமானை நேசிக்கும் அவரது தம்பிகளுக்கும் மிக முக்கியமான நாள். சீமான் பிறந்த நாள், முக்கிய பாத்திரங்களில் அவர் நடித்துள்ள 'மிக மிக அவசரம்', 'தவம்' படங்கள் வெளிவரும் நாள் என மூன்று வகைகளில் அவர்களுக்கு இது முக்கியமான நாளாகிறது. இன்று சீமான் தம்பிகளுக்கு ட்ரிபிள் ட்ரீட்தான்!