புதுக்கோட்டை மாவட்டம் குடுமியாண்மலை அருகில் உள்ளது பரப்பூர் கிராமம். இங்கு சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் பறைசாற்றும் வகையில் பகவதி அம்மன் கோயிலுக்கு, அருகிலேயே பள்ளிவாசலும் உள்ளது. பகவதி அம்மன் கோயிலில் ஆடிமாதம் காப்புக்கட்டி 9 நாட்கள் திருவிழா நடக்கிறது. இதில், பல தலைமுறைகளுக்கு முன்பே "5 ஆம் நாள் மண்டகப்படி பட்டாளத்தார்கள்" என்று ஒதுக்கப்பட்டுள்ளது. பட்டாளத்தார்கள் என்பது பரம்பூர் கிராமத்தில் உள்ள இஸ்லாமியர்கள்தான்.
ஒவ்வொரு ஆண்டும் திருவிழா என்றதும் கிராமத்தினர் தயாராகும் போது பட்டாளத்தார்களும் தயாராகிவிடுகிறார்கள். திருவிழாவில் ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு சந்தனக்காப்பு செலுத்தி புத்தம் புது பட்டாடைகள், தங்க நகைகள் அணிவித்து சிறப்பு அலங்காரத்தில் அம்மன் வீற்றிருக்க பக்தர்கள் அபிசேகம் செய்வது வழக்கம். அதே போல பட்டாளத்தார்கள் என்கிற இஸ்லாமியர்களும் தங்களுக்கான 5 ம் நாள் மண்டகப்படி அன்று அம்மனுக்கு அனைத்து பூசைப் பொருட்களும் வாங்கி கொடுத்து சிறப்பு வழிபாடுகள் செய்வதுடன் சுமார் 5 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கி மகிழ்கின்றனர்.
இந்த ஆண்டு ஆடித்திருவிழாவின் 5 ஆம் நாள் மண்டகப்படி வியாழக்கிழமை(25.7.2024) நடந்தது. அம்மனுக்கு சந்தனக்காப்பு செய்த இஸ்லாமியர்கள் அன்னதானத்திற்கு வந்த மக்களை மகிழ்வோடு வரவேற்று அன்னதானம் பரிமாறி மகிழ்ந்தனர். இரவில் ஆடல்பாடல் நிகழ்ச்சியும் நடத்தினர்.
“எங்கள் கிராமத்தில் மதநல்லிணக்க சகோதரத்துவம் பல தலைமுறையாக காக்கப்படுகிறது. அதனால் தான் இரு வழிபாட்டு தளங்களும் அருகருகே உள்ளது. தலைமுறை தலைமுறையாக ஒவ்வொரு திருவிழாவிலும் இஸ்லாமியர்கள் பங்கேற்று அவர்களின் மண்டகப்படியை சிறப்பாக செய்வார்கள். அதே போல இந்த வருடமும் அனைவருக்கும் அன்னதானம் வழங்கி கலை நிகழ்ச்சியும் நடத்தியுள்ளனர். இது தான் உண்யைான மதநல்லிணக்கம், சகோதரத்துவம்" என்று பெருமையாக கூறுகின்றனர் கிராம மக்கள்.