சென்னையில் தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 'அனைத்துலக முருகர் பக்தர் மாநாடு' நடைபெற இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில் பணிகள் நடைபெற்று வரும் இடத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பேசுகையில், ''இது தனிப்பட்ட முறையில் நடைபெறும் கட்சி மாநாடு அல்ல என்பதை ஏற்கனவே நான் கூறிவிட்டேன். 'முருகன் என்றாலே அழகு' என்ற ஒரு பொருள் உண்டு. அழகாக நடைபெறுகின்ற இந்த முருகர் மாநாட்டை இயற்கையையும் எழிலையும், விரும்புகின்றவர்கள் அனைவரும் பார்க்க வரலாம். இதில் எந்த தடையும் இல்லை என்பதை சொல்லிவிட்டேன்.
பாஜகவின் தமிழக தலைவர் என்னிடம் கைய குலுக்கி, 'சிறப்பான ஏற்பாடு, முருகரை கையில் எடுத்துள்ளீர்கள்' என்றார். 'முருகர் அனைவரையும் வாழ வைப்பார்' என்று நான் திரும்பச் சொன்னேன். அந்த வகையில் அனைவருடைய கவனத்தையும் திருப்புகிற மாநாடாக தமிழக முதல்வர் வடித்தெடுத்த இந்த மாநாடு இருக்கிறது'' என்றார்.
'கோயம்பேடு பேருந்து நிலையத்தில் எங்களுக்கு மால் வேண்டாம் ஒரு பொது பூங்கா வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளது' என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த சேகர்பாபு, ''நம்மைப் பொறுத்தவரை தமிழக முதல்வர் உத்தரவிட்டிருப்பது அடுத்த ஐம்பதாண்டுகளுக்கு பெருநகர மக்களுடைய தேவைகள் என்ன என்பதை கணக்கிட்டு அதற்கேற்றார் போல் மக்கள் பயன்பாட்டிற்கு உகந்தது எதுவோ அதை ஏற்படுத்துவதுதான். அதிகாரிகளின் ஆலோசனை நடைபெற்று வருகிறது. ஆலோசனையின் இறுதிக்கு பிறகு முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று பெரிய வகையில் மக்களுக்கு எது பயன்படுகிறதோ அந்த திட்டத்தை நிச்சயமாக அங்கு கொண்டு வருவோம்''என்றார்.