திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ளது புருஷோத்தம குப்பம். இந்தப் பகுதியைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் சம்பத். இவர் அதே பகுதியில் தாய் வனிதா பெயரில் இடம் ஒன்றைப் பணம் கொடுத்து வாங்கி வீடு கட்டி வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் சம்பத்தின் தம்பி நேரு, புதிதாகக் கட்டிய வீட்டில் தனக்கும் பங்கு வேண்டும் என்று அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். அதனால் சம்பத் ரூ.10 லட்சம் மதிப்புள்ள லாரி ஒன்றை வாங்கி தனது தம்பி நேருவுக்குக் கொடுத்துள்ளார். இருப்பினும் லாரி வாங்கிக் கொடுத்தது போதாது, வீட்டிலும் பங்கு வேண்டும் என்று சம்பத்திடம் மீண்டும் தகராறு செய்திருக்கிறார்.
இதனிடையே இந்தச் சம்பவம் குறித்து ஏற்கெனவே காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் இருவரையும் அழைத்து சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் வழக்கறிஞர் சம்பத்தின் வீட்டைத் தாய் வனிதா மற்றும் சகோதரர் நேரு இருவரும் சேர்ந்து உடைத்து உள்ளே இருந்த பொருட்களைச் சேதப்படுத்தியுள்ளனர். இதனைத் தொடர்ந்து நடந்த சம்பவம் குறித்து வாணியம்பாடி கிராமிய காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் சம்பத்தின் வீட்டில் இருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். சொத்து தகராறில், தம்பி மற்றும் தாய் ஒன்று சேர்ந்து அண்ணன் வீட்டை அடித்து உடைத்த சம்பவத்தில் சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.