
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.
திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்த தேர்தலில் கச்சத்தீவு விவகாரம் பேசு பொருளாகியுள்ளது. திமுகவும், பாஜகவும் கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக மாறி மாறி கேள்வி எழுப்பி வருகின்றன. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தான் கச்சத்தீவு இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்டதாகவும், அப்போது முதல்வராக இருந்த கலைஞர் எந்தக் கேள்வி கேட்கவில்லை என பிரதமர் இன்று குற்றச்சாட்டை வைத்திருந்தார்.

இந்நிலையில் சென்னையில் தேர்தல் பரப்புரைக்கு மத்தியில் செய்தியாளர்களை சந்தித்த மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் இது குறித்த கேள்விக்கு, ''இது சம்பந்தமாக சட்டமன்றத்தில் ஏராளமான முறை அமைச்சர் துரைமுருகன் மிகச் சிறப்பாக சொல்லியிருக்கிறார். கச்சத்தீவு விவகாரம் வரும் போதெல்லாம் தமிழ்நாட்டின் நீர்வளத்துறை அமைச்சராக இருந்த துரைமுருகன், அன்று என்ன நடந்தது; அண்ணா கண்டன கூட்டங்களை நடத்தியது; கலைஞர், இந்திரா காந்தி அம்மையாருக்கு எதிராக நடத்திய போராட்டங்கள்; சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் இது பற்றி நிறைய விஷயங்களை தெரிவித்துள்ளார். ஆனால் இதையெல்லாம் எதையுமே தெரிந்து கொள்ளாமல் ஒரு பிரதமர் இந்த மாதிரி சொல்லி இருக்கிறார் என்பது ஒரு அதிசயமான ஒன்றாக இருக்கிறது. அப்படி இருந்தால் இந்த பத்தாண்டு காலம் கச்சத்தீவு மீட்புக்கு நரேந்திர மோடி என்ன நடவடிக்கை எடுத்தார் என்பதையும் அவர்கள் விலக்கி இருந்தால் நன்றாக இருக்கும்'' என்றார்.

அதேபோல் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கச்சத்தீவு தொடர்பான கேள்விக்கு பதிலளித்து பேசுகையில், ''ஒவ்வொரு நாடாளுமன்ற தேர்தலின் போதும் இந்த பிரச்சனையை பாஜக கையில் எடுக்கிறது. நாட்டு மக்கள் உண்மை நிலையை அறிந்ததால் தான் தொடர்ந்து பாஜகவிற்கு தமிழகத்தில் தோல்வியை கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே என்ற வார்த்தை உண்டு. அதற்கு முழுக்க முழுக்க தகுதி படைத்தவர் பிரதமர் மோடி.
கச்சதீவை பொறுத்த அளவில் அன்றைய முதல்வர் கலைஞர் கச்சத்தீவை இலங்கைக்கு ஒப்படைக்கிற சூழல் வருகின்ற பொழுது அது குறித்து முதன் முதலில் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டினார். அன்றைய முதல்வர் கலைஞர் அறிவித்த கூட்டத்தில் கூட கலந்து கொள்ளாமல் அதிமுக வெளிநடப்பு செய்தது. அதோடு மட்டுமல்லாமல் கச்சத்தீவு பறிபோய் போய்விடக் கூடாது என்பதற்காக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்வதற்கும், மத்திய அரசுக்கு இந்த கச்சத்தீவை ஒப்படைக்க கூடாது என முதன் முதலில் குரல் எழுப்பியவர் கலைஞர். ஆகவே மோடி உருண்டு புரண்டு பொய் சொன்னாலும் சரி, தண்ணீருக்குள் போய் பொய் சொன்னாலும் சரி, பறந்து வந்து பொய் சொன்னாலும் சரி தமிழக மக்கள் நம்புவதாக இல்லை'' என்றார்.