சொத்துக் குவிப்பு வழக்கில் மூன்றாண்டு சிறை தண்டனை பெற்ற முன்னாள் அமைச்சர் பொன்முடி தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம் அளித்த தண்டனைக்கு இடைக்கால தடை விதித்து நேற்று தீர்ப்பளித்திருந்தது. இதனால் மீண்டும் பொன்முடி சட்டமன்ற உறுப்பினராக தொடராக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. இந்நிலையில் இதுகுறித்து தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் பல்வேறு விளக்கங்களை கொடுத்துள்ளார்.
நெல்லையில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் தயாரிப்பு பொருட்களை விற்பனை செய்யும் கண்காட்சி இன்று தொடங்கியது. இதனை தமிழக சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், ''பொன்முடி உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்தார். அவருக்கு ஒரு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் தண்டனை வழங்கியது. மேல்முறையீடு செய்தார். நேற்று உச்சநீதிமன்ற மேல்முறையீட்டு வழக்கில் அவருக்கு வழங்கப்பட்ட தண்டனை தடை செய்யப்பட்டுள்ளது. உங்கள் எல்லோருக்கும் தெரியும் உயர்நீதிமன்றம், கீழமை நீதிமன்றம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மக்கள் பிரதிநிதிக்கு தண்டனை வழங்குமானால் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி தண்டனை காலத்தை பொறுத்து அவர்கள் வைக்கிற பதவியிலிருந்து விடுவிக்கப்படுவார்கள்.
அதன் அடிப்படையில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புப்படி அவருடைய பதவியைத் தொடர்ந்து நீடிப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இந்த உத்தரவை நாங்கள்தான் போட்டோம். இப்பொழுது உச்சநீதிமன்ற தீர்ப்பில் உயர்நீதிமன்ற தீர்ப்பில் வழங்கப்பட்ட தண்டனை தடை செய்யப்பட்டதால் மீண்டும் அவருக்கு அந்த வாய்ப்பு வழங்கப்படும். எவ்வாறு வழங்குவோம் என்றால் வயநாடு நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல், லட்சத்தீவு நாடாளுமன்ற உறுப்பினர் முகமது பைசல், உத்தரப்பிரதேச மாநிலம் காசிப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் அன்சாரி இவர்களுக்கு எல்லாம் என்னென்ன நடைமுறை சட்டத்தின்படி என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோ அதேபோல் பொன்முடிக்கும் பதவியை வாங்க சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.