தமிழகத்தில் அமைச்சரவை மாற்றத்திற்கு பின்பு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (08-10-24) காலை 11 மணிக்கு தமிழக அமைச்சரவை கூட்டம் கூடியது. அப்போது, தமிழ்நாட்டில் மாவட்ட வளர்ச்சிப் பணிகளைத் துரிதப்படுத்தவும், பொது மக்களுக்குச் சென்றடைய வேண்டிய நலத்திட்ட உதவிகளைக் கண்காணிக்கவும், இயற்கைச் சீற்றம், நோய்த்தொற்று இன்னபிற நேரங்களில் அவசரகாலப் பணிகளைக் கூடுதலாக மேற்கொள்ளவும், பொறுப்பு அமைச்சர்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நியமித்து உத்தரவிட்டார்.
இந்த நிலையில், அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது என்ன என்பது குறித்து அமைச்சர்கள் டி.ஆர்.பி ராஜா மற்றும் தங்கம் தென்னரசு கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டி அளித்தனர். அப்போது அமைச்சர் தங்கம் தென்னரசு கூறுகையில், “ரூ.38,600 கோடி மதிப்புள்ள 14 புதிய முதலீடுகளுக்கு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மின்னணு, மொபைல் போன் ஆலை, பாதுகாப்பு மற்றும் மருத்துவ உபகரணங்கள் ஆலை அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் டாடா நிறுவனம் சார்பில் 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. பசுமை ஹைட்ரஜன், பசுமை அமோனியா உற்பத்தி சார்ந்த திட்டங்களுக்கு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ரூ.38, 600 கோடி மதிப்பிலான இந்த திட்டங்களின் மூலம், தமிழகத்தில் 46,930 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்” எனக் கூறினார்.