தஞ்சை மாவட்டம் அணைக்கரையில் கீழணை உள்ளது. இந்த அணை கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே ஆங்கில பொறியாளர் சர் ஆதார் காட்டன் என்பவரால் 1836 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இதில் தெற்கு, வடக்கு கொள்ளிட பிரிவுகள் என இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஷட்டருடன் கூடிய 80 மதகுகள் உள்ளது. இந்த அணைக்கு மேட்டூரில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் கல்லணையில் தேக்கப்பட்டு அதன் ஒரு பகுதியாக கொள்ளிடம் ஆற்றில் அனுப்பப்படுகிறது. இந்த அணையின் மொத்த கொள்ளளவு 9 அடியாகும். அதாவது 150.13 மில்லியன் கன அடி தண்ணீர் தேக்கப்படுகிறது.
இதனை கொண்டு கடலூர், மயிலாடுதுறை, தஞ்சை மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் ஆண்டுதோறும் சம்ப சாகுபடியின் போது நேரடி நெல் விதைப்பு பணியில் தீவிரமாக ஈடுபடுவர் சில குறிப்பிட்ட பகுதிகளில் நாற்றங்கால் தயார் செய்யும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் இந்த ஆண்டு விவசாயிகள் பயன்பெறும் வகையில் கீழணை மற்றும் வீராணம் ஏரியில் இருந்து பாசனத்திற்காகத் தண்ணீரினை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் திறந்து வைத்து மலர் தூங்கினார்.
இவருடன் அரசு தலைமை கொறடா கோ.வி செழியன், கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார், கடலூர் சட்டமன்ற உறுப்பினர் கோ.ஐயப்பன், காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ம.சிந்தனைச்செல்வன், மயிலாடுதுறை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம், சிதம்பரம் சார் ஆட்சியர் ராஷ்மிராணி, பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் மரியசூசை, செயற்பொறியாளர் காந்தரூபன், விவசாயச் சங்கத் தலைவர்கள் ரங்கநாயகி, இளங்கீரன், ரவீந்திரன், வினாயகமூர்த்தி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் கூறுகையில், “திறக்கப்பட்ட தண்ணீர் மூலம் கீழணை வடக்கு பிரிவிலிருந்து வடவாறு, வடகராஜன் மற்றும் கஞ்சன் கொள்ளை வாய்க்கால்கள் மூலம் கடலூர் மாவட்டத்தில் உள்ள 92,253 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. அதேபோல் தெற்கு பிரிவிலிருந்து தெற்கு ராஜன், கும்கிமணியார், மேலராமன் வாய்க்கால்கள் மூலம் மயிலாடுதுறை மற்றும் தஞ்சை மாவட்டங்களில் உள்ள மொத்தம் 39 ஆயிரத்து 50 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
கீழனையிலிருந்து திறக்கப்படும் நீர் கடலூர், மயிலாடுதுறை, தஞ்சை மாவட்டங்கள் உட்பட சுமார் 1 லட்சத்து 31 ஆயிரத்து 903 ஏக்கர் விளைநிலங்கள் பயிர் சாகுபடி செய்ய பயன்படுகிறது. அதேபோல் வீராணம் ஏரி மூலம் சிதம்பரம், காட்டுமன்னார்குடி, புவனகிரி வட்டங்களில் உள்ள 40,000 ஏக்கர் விளை நிலங்களுக்கு பாசன வசதி அளிக்கப்படுகிறது. விவசாயிகளுக்குத் தேவையான உரங்கள் கையிருப்பு உள்ளது. நெல் கொள்முதல் நிலையங்கள் முறையாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. விவசாயிகளுக்குத் தேவையான தண்ணீர் இருப்பு உள்ளது எனத் தெரிவித்தார்.