தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், வருகிற ஏப்ரல் 6 ஆம் தேதி இந்தியா கூட்டணியின் சிதம்பரம் மக்களவைத் தொகுதி வேட்பாளரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல். திருமாவளவன், மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சுதா ஆகியோரை ஆதரித்து சிதம்பரத்தில் நடைபெறும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.
இதற்காக சிதம்பரம் புறவழிச்சாலையில் உள்ள லால்புரம் என்ற இடத்தில் பிரம்மாண்ட மேடை மற்றும் பொதுக்கூட்ட பந்தல் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த பணிகளை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வியாழக்கிழமை(28.4.2024) பார்வையிட்டு ஆய்வு செய்தார். பொதுக்கூட்ட மேடை அமைய உள்ள இடத்திற்கு வந்த அமைச்சர் பன்னீர்செல்வம், மேடை அமைந்துள்ள பகுதி, தொண்டர்கள் அமர உள்ள இடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை நடந்து சென்று பார்வையிட்டார். அப்போது மேடை அமைக்கும் பணிகள் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "வருகிற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சிதம்பரம் தொகுதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் தொல். திருமாவளவன், மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி வேட்பாளர் உள்ளிட்டோரை ஆதரித்து சிதம்பரத்தை அடுத்த புவனகிரி கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட லால்புரம் பகுதியில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார். இதில் வாக்காளர்கள், பொதுமக்கள், தொகுதிகளைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் கலந்து கொள்வார்கள். மாநாடு போன்று இந்த கூட்டம் நடைபெற இருக்கிறது.
முதலமைச்சர் நேரடியாகச் சென்று பிரச்சாரம் செய்து வருகிறார். 3 ஆண்டு காலத்தில் செய்துள்ள சாதனைகள், பணிகள் குறித்து முதல்வர் பேசி வருகிறார். சுமார் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்கும் வகையில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. 75 ஆயிரம் பேர் வருவார்கள் என எதிர்பார்க்கிறோம். முந்தைய தேர்தலில் எதிர்க்கட்சியாக இருக்கும்போது மக்களைச் சந்தித்து வாக்கு கேட்டு 39 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறோம். இந்த ஆட்சியில் தனி நபர்கள் பண பலன்களைப் பெற்றுள்ளனர். ஒரு கோடியே 15 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத்தொகை நேரடியாகச் செல்கிறது. மகளிருக்கு இலவச பேருந்து பயணம், மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் போன்ற திட்டங்கள் எந்த உலகத்திலும் இல்லை. பெண் கல்வியை ஊக்குவிப்பதற்காகக் கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு உதவித்தொகை என அனைத்து உதவிகளும் நேரடியாக பயனாளிகளுக்குச் செல்கிறது.
திமுக கூட்டணி கொள்கை உள்ள கூட்டணி. இந்த கூட்டணிக்கு மக்கள் ஆதரவு இருக்கிறது. இது 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும். திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் கேட்கும் சின்னங்களை முடக்குவதன் மூலமாக அவர்களது வெற்றியை தடுக்க முயற்சிக்கின்றனர். இது மோடியின் மோடி மஸ்தான் வேலை. இது எதிர்க்கட்சிகளை முடக்குவதற்கு செய்கின்ற வேலை. இந்த ஆட்சி இ.டி., சி.பி.ஐ போன்றவற்றை வைத்துக் கொண்டு ஆட்சி புரிகின்றார்கள். ஆனால் தமிழக முதலமைச்சர் மக்கள் நலத்திட்டங்களை செய்து விட்டு, அதை முன்னெடுத்து பிரச்சாரம் செய்து வருகிறார். மக்கள் சக்தியாக ஒன்று திரண்டு வெற்றி பெறச் செய்வார்கள். 100 நாள் வேலைத் திட்டத்தில் கூலியை உயர்த்தியது அவரது பயத்தை காட்டுகிறது. இவற்றையெல்லாம் பார்த்து மக்கள் ஏமாற மாட்டார்கள். திரண்டு வந்து திமுக கூட்டணிக்கு வாக்களிப்பார்கள்” எனக் கூறினார்.