கலைஞர் நூற்றாண்டு விருது விழாவில், 100 கவிஞர்களுக்கு கலைஞர் விருது வழங்கப்பட்டது.
சென்னை ராணி சீதை மன்றத்தில், கவிதை உறவு இலக்கிய அமைப்பு என்கிற அமைப்பு, விஜிபி உலகத் தமிழ்ச்சங்கத்துடன் இணைந்து கலைஞர் நூற்றாண்டு விழாவை நடத்தியது. இந்த விழாவிற்கு, விஜிபி குழுமத்தலைவர் சந்தோசம் தலைமை ஏற்க, கவிதை உறவு இலக்கிய அமைப்பின் தலைவர் கலைமாமணி ஏர்வாடி ராதாகிருஷ்ணன் வரவேற்புரையாற்றினார். இதில் டாக்டர் ஜெயராஜமூர்த்தி, புதுக்கோட்டை கவிதைப்பித்தன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார். அதனை தொடர்ந்து, கவிஞர்கள் 100 பேருக்கு, கலைஞர் விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
அந்த வகையில், கவிஞர்கள் அமுதா தமிழ்நாடன், மானா.பாஸ்கரன், தங்கம் மூர்த்தி, மு.முருகேஷ், நெல்லை ஜெயந்தா, காசி முத்துமாணிக்கம், பிருந்தாசாரதி, இலக்கியா நடராஜன், இளையராஜா, விஜயகிருஷ்ணன்,சொற்கோ கருணாநிதி, கடவூர் மணிமாறன், ஜலாலுதீன், மலரடியான்,இன்பா,புனிதஜோதி , ஒசூர் மணிமேகலை, வல்லம் தாஜ்பால், தமிழமுதன், தஞ்சை ஹரணி, தஞ்சை இனியன் உள்ளிட்ட 100 கவிஞர்களுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலைஞர் விருது வழங்கினார்.
கவிஞர்களுக்கு விருது வழங்கிய பின்பு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது, “இந்த விருதை என்னிடம் பெற்றது உங்களுக்கான சிறப்பில்லை. உங்களுக்கெல்லாம் விருது வழங்கியது எனக்குப் பெருமை” என்று பேசி கலைஞர் குறித்து நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார். அதன் பின்னர், புலவர் மதியழகன் நன்றி கூற, இந்த விழா இனிதே நிறைவேறியது.