கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே பிச்சாவரம் அறிஞர் அண்ணா சுற்றுலா மையத்தினை ரூ. 14.07 கோடி மதிப்பீட்டில் பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகளுடன் மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “2021-22 ஆம் நிதியாண்டிற்கான சட்டப்பேரவை சுற்றுலாத் துறை மானியக் கோரிக்கையில், சுற்றுலாத் தலங்களை பிரபலப்படுத்தும் பொருட்டு சுற்றுலாத் தலங்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளுடன் தரம் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதனடிப்படையில் கடலூர் மாவட்டத்தில் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான பிச்சாவரம் அறிஞர் அண்ணா சுற்றுலா மையத்திற்கு பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளின் தேவைகளை நிறைவு செய்யும் வகையிலும், சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகப்படுத்தும் நோக்கத்துடனும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் வாயிலாக பிச்சாவரம் சுற்றுலா மையத்தினை மேம்படுத்தும் வகையில் இந்தியாவின் சிறுதொழில்கள் மேம்பாட்டு வங்கியின் கிளஸ்டா மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ. 14.07 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகிறது.
இப்பணிகள் பத்து மாதங்களில் விரைவாக முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் சுற்றுலாப் பயணிகளின் கோரிக்கையான பிச்சாவரத்தில் உள்ள தீவுப்பகுதியில் சுற்றுலாப் பயணிகளின் வசதிகளை மேம்படுத்தும் வகையில் காட்டேஜ் அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்படும். உலக நாடுகளில் இருந்து பல லட்சம் மக்கள் வந்து செல்லும் சுற்றுலா மையமாக பிச்சாவரம் உள்ளது. இந்த சுற்றுலா மையத்தை எழில்மிகு சுற்றுலா மையமாக உருவாக்க முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று தேவையான அனைத்தும் நடவடிக்கைகளும் படிப்படியாக மேற்கொள்ளப்படும்” எனத் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் திமுக மாநிலச் செயற்குழு உறுப்பினர் கிள்ளை ரவீந்திரன், கிள்ளை பேரூராட்சி மன்றத் தலைவர் மல்லிகா, பரங்கிப்பேட்டை ஒன்றிய பெருந்தலைவர் கருணாநிதி சுற்றுலா மைய அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர்.