சிதம்பரம் நகரத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் சிதம்பரம் நகரத்திற்கு கடலூர் மார்க்கத்தில் இருந்து உள்ளே வரும் வரும்போது பைசல் மஹால் திருமண மண்டபம் எதிரே உள்ள தில்லையம்மன் ஓடையின் இடது கரையில் பைசல் மஹால் திருமண மண்டப பகுதியில் இருந்து சிதம்பரம் பேருந்து நிலையம் வரை 2.40 கிமீ தூரம் தடுப்புச் சுவர் அமைத்து வெளிவட்ட சாலை அமைக்கும் பணிகள் சிதம்பரம் கோட்ட நீர்வளத் துறையின் வாயிலாக ரூ 34.76 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது.
இந்த பணிகளைச் செவ்வாய்க்கிழமை(24.9.2024) வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் மாவட்ட ஆட்சியர் சிபிஆதித்யாசெந்தில்குமார் உள்ளிட்ட அதிகாரிகளுடன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து சிதம்பரம் நகராட்சி, அண்ணாமலை நகர் பேரூராட்சி, மற்றும் குமராட்சி, பரங்கிப்பேட்டை ஒன்றியங்களை சார்ந்த 10 ஊரக ஊராட்சிகளுக்கு உட்பட்ட 36 ஊரக குடியிருப்புகளுக்குக் கொள்ளிடம் ஆற்றினை நீர் ஆதாரமாகக் கொண்ட கூட்டு குடிநீர் திட்ட பணிகள் நடைபெறுவதைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
சிதம்பரம் நகராட்சிக்குட்பட்ட 5-வது வார்டு பகுதியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாடு திட்டத்தின் கீழ் ரூ.95 லட்சம் மதிப்பீட்டில் தச்சன் குளம் தூர்வாரி நடைபாதை மற்றும் மின் விளக்குகள் பாதுகாப்பு வேலி அமைக்கும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். சிதம்பரம் நகர மன்ற தலைவர் கே ஆர் செந்தில்குமார் நீர்வளத்துறை செயற்பொறியாளர் காந்தரூபன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் குமாரராஜா, அண்ணாமலை நகர் பேரூராட்சி மன்ற தலைவர் பழனி, சிதம்பரம் நகராட்சி ஆணையர் மல்லிகா, சிதம்பரம் நகர் மன்ற உறுப்பினர்கள் வெங்கடேசன், ஏ ஆர் சி மணிகண்டன், தாரணி அசோக் திமுக நகர துணைச் செயலாளர் பாலசுப்ரமணியன் உள்ளிட்டவர்கள் இருந்தனர்.