திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் ஒன்றியம் அய்யம்பாளையம் பேரூராட்சி 1வது வார்டான ஏ.கே.ஜி.நகர், மருதாநதி அணைக்கு மேற்கு பகுதியில் உள்ளது. இங்கு மீனவர்கள், மலை விவசாயிகள் உட்பட சுமார் 100 குடும்பங்கள் உள்ளன. மழை காலங்களில் அவர்கள் மருதா நதியிலிருந்து ஏ.கே.ஜி. நகருக்கு மழை நீரில் நனைந்தபடிதான் செல்ல வேண்டிய நிலை இருந்து வந்தது.
கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் பலமுறை கோரிக்கை விடுத்தும் மருதா நதி அணையிலிருந்து ஏ.கே.ஜி.நகருக்குச் சாலை வசதி செய்து கொடுக்கவில்லை. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைந்தவுடன் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமியிடம் ஏ.கே.ஜி. நகர் பொதுமக்கள், விவசாயிகள் தங்கள் கிராமத்திற்குச் சாலை வசதி வேண்டுமெனக் கோரிக்கை விடுத்தனர்.
அதைத் தொடர்ந்து தான் அமைச்சர் ஐ.பெரியசாமி வனத்துறை மற்றும் இதர துறை அதிகாரிகளிடம் பேசி ஏ.கே.ஜி. நகருக்கு ரூ.1கோடியே 26லட்சம் மதிப்பில் சாலை வசதி செய்து கொடுத்தார். மருதா நதி அணையிலிருந்து விவசாயிகளுக்குத் தண்ணீர் திறக்க வந்த அமைச்சர் ஐ.பெரிய சாமி ஏ.கே.ஜி.நகருக்குச்சென்று சாலை வசதி மற்றும் இதர வசதி களை பார்வையிட்டார். அப்போது அவருக்கு ஏ.கே.ஜி. நகர் மக்கள் மாலை மற்றும் சாலை அணி வித்து குலவையிட்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அப்போது ஏ.கே.ஜி நகரைச் சேர்ந்த கிராம மக்கள் அமைச்சர் ஐ.பெரியசாமியிடம், பி.எஸ்.என்.எல். செல்போன் டவர் வசதி மற்றும் மருதா நதி அணைக்கு வரும் பேருந்து ஏ.கே.ஜி. நகர் வரை வரும்படி செய்து கொடுக்க வேண்டுமென கோரிக்கை வைத்தனர். உடனடியாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளைத் தொடர்புகொண்ட அமைச்சர் ஐ.பெரியசாமி ஏ.கே.ஜி. நகர் வரை பேருந்துவசதிக்கு ஏற்பாடு செய்ய உத்தரவிட்டார். மேலும் அணையில் மீன்பிடிக்கும் ஆயக்கட்டு மீனவர்கள் தங்களுக்குரிய 30சதவீத தொகையை முறையாக மீனவளத்துறை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். சம்மந்தப்பட்ட மீன்வளத்துறை அதிகாரிகளைத் தொடர்புகொண்ட அமைச்சர் ஐ.பெரியசாமி எக்காரணம் கொண்டும் ஏ.கே.ஜி. நகரில் குடியிருக்கும் மீனவர்களின் நலன்கள் பாதிக்கக்கூடாது எனவும் அவர்களின் உரிமையான 30சதவீத தொகையைத் தொடர்ந்து வழங்க வேண்டுமென உத்தரவிட்டார்.
அப்போது அங்கிருந்த மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியில் கைதட்டி ஆரவாரம் செய்தனர். பி.எஸ்.என்.எல். செல்போன் டவர் எம்.பி அவர்கள் முயற்சியால் கொண்டுவர வேண்டும். அதற்கான முயற்சியைத் திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம் செய்வார் எனக் கூறியதோடு அருகில் இருந்த எம்.பி.சச்சிதானந்தம், முன்னால் எம்.பி வேலுச்சாமி, மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் மலை விவசாயிகளின் நலன் கருதி செல்போன் டவர்கள் கொண்டுவந்தது போல் இப்பகுதியிலும் செல்போன் டவருக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். அதன்பின்னர் ஏ.கே.ஜி. நகர் மக்கள் தங்களுக்கும் கலைஞர் பெயரால் வழங்கப்படும் கலைஞரின் கனவு இல்லம் வீடுகள் வழங்கும் திட்டம் மூலம் வீடுகள் வழங்க வேண்டுமென கோரிக்கை வைத்ததை நிறைவேற்றித் தருகிறேன் என அமைச்சர் ஐ.பி.உறுதி அளித்தார்.