திண்டுக்கல் மாநகர இரண்டாவது வார்டு திமுக செயலாளர் கிருஷ்ணசாமியின் பேத்தி அவந்திகா. இவர் மதுரையில் உள்ள கேரன் பப்ளிக் பள்ளியில் 4 ஆம் வகுப்பு படிக்கிறார். மாணவி அவந்திகாவிற்கு சிலம்பத்தில் உள்ள ஆர்வம் காரணமாக அவரது தந்தை மதுரை விராட்டிபத்தில் உள்ள ஸ்ரீ மாருதி சிலம்ப பயிற்சி பள்ளியில் ராஜமகாகுரு ஆசான் ராமகிருஷ்ணனிடம் சிலம்பம் பயிற்சிக்காக சேர்த்தார். ஒன்றரை வருடம் சிலம்ப பயிற்சிக்கு பின் பல்வேறு சிலம்பம் போட்டிகளில் பங்கேற்று 23 தங்கப் பதக்கமும், 2 வெள்ளி பதக்கமும் வென்றுள்ளார்.
மாணவி அவந்திகா மலேசியாவில் மே 25 முதல் 28 மே வரை நடைபெற்ற சர்வதேச சிலம்பம்போட்டியில் பங்கேற்றார். 7-9 வரை நடைபெற்ற மகளிர் பிரிவில் ஒற்றை அலங்கார சுற்றில் வெள்ளி பதக்கமும் தனித்திறமை சுற்றில் வெண்கல பதக்கமும் வென்றார். நிறைவாக நடைபெற்ற இறுதிச் சுற்றில் 12 பேருக்கு இடையிலான போட்டியில் மூன்றாம் இடத்தைப் பிடித்து வெள்ளி பதக்கம் வென்றார். மாணவி அவந்திகா மாருதி பள்ளியின் சிலம்பொலி விருது, வீரதமிழச்சி விருது, தமிழ் அமுது அறக்கட்டளை சார்பாக கலைஅரசி விருதுபோன்ற விருதுகளையும் பெற்றுள்ளார். வெற்றி பெற்ற மாணவி அவந்திகா இன்னும் 4 மாதங்களில் துபாயில் நடைபெற உள்ள சர்வதேச சிலம்பம்போட்டியில் பங்கேற்க உள்ளார்.
திண்டுக்கல்லில் உள்ள மாவட்ட தி.மு.க அலுவலகத்திற்கு வந்த ஊரக வளர்ச்சித்துறை அமைச்சரும், திமுக மாநில துணைப் பொதுச் செயலாளருமான ஐ.பெரியசாமி மாணவி அவந்திகாவை நேரில் அழைத்து வாழ்த்தினார். அப்போது அங்கு வந்த உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி, பழனி சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான ஐ.பி.செந்தில்குமார் ஆகிய இருவரும் வெற்றி பெற்ற மாணவியைப் பாராட்டி வாழ்த்தினார்கள்.
அப்போது ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி மாணவியை வாழ்த்தி பேசும்போது, சிறுவயதிலேயே சர்வதேச அளவிற்கு சாதனைப் படைத்துள்ளாய். இனியும் மென்மேலும் பயிற்சிப்பெற்று தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்க்கும் விதமாக பல சாதனைகளைப் படைக்க வேண்டும் என்று கூறினார். அப்போது மாவட்ட மற்றும் நகர ஒன்றிய பொறுப்பாளர்கள் பலரும் உடன் இருந்தனர்.