வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்து பொன்னையாற்றின் குறுக்கே உள்ள சித்தூர் - திருத்தணி நெடுஞ்சாலையில் ரூ.35 கோடி மதிப்பீட்டில் புதிதாக பாலம் கட்டப்பட்டுள்ளது. அந்த பாலத்தை, காட்பாடி சட்டமன்ற உறுப்பினரும், தமிழக நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் நேற்று (30-08-24) மாலை திறந்து வைத்தார்.
அதில் பேசிய அமைச்சர் துரைமுருகன், “என்னை போற்றுகிறவர்களும் இந்த பாலத்தில் தான் போக வேண்டும். என்னை திட்டுகிறவர்களும் இந்த பாலத்தில் தான் போக வேண்டும். நல்லவர்களும் இதில் தான் போக வேண்டும். வல்லவர்களும் இதில் தான் போக வேண்டும். அவ்வளவு பேரையும் அந்த பாலம் சுமந்திருப்பதை போல, நான் தாங்கிக்கொண்டிருக்கிறேன். காரணம், ஒரு நாள் இரண்டு நாள் இல்லை 50 வருடம் இந்த தொகுதியில் என்னை எம்.எல்.ஏவாக வைத்திருக்கிறார்கள். இந்தியாவில் யாரும் ஒரே தொகுதியில் 50 வருடம் எம்.எல்.ஏவாக இருந்தது கிடையாது.
அன்றைக்கு வந்த ராஜ்நாத் சிங் ஆச்சரியப்பட்டு போனார். ஒரே தொகுதியாக எனக் கேட்டார். எல்லோரும் என்னை ஒரே தொகுதியில் நின்று வெற்றி பெறுகிறீர்கள் என்று கேட்பார்கள். அதற்கு நான், அது தொகுதி என்று சொல்லமாட்டேன், திருக்கோவில் தான் காட்பாடி என்று சொல்வேன். எனது வாக்காள மக்கள் எனக்கு கடவுள். என் உயிர் உள்ளவரையில் உங்களுக்கு அடிமையாக இருந்து தியாகம் புரிந்து நன்றியுள்ளவனாக இருப்பேன். எனது உயிர் பிரிகிற போது கூட எனது தொகுதி பெயரைச் சொல்லிக்கொண்டு தான் போவேன். காட்பாடி.. என்று சொல்லிக்கொண்டு தான் என் உயிர் பிரியும்” என உருக்கமாகப் பேசினார்.