Skip to main content

முழு கொள்ளளவையும் நெருங்கி வரும் மேட்டூர் அணை; கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!

Published on 29/07/2024 | Edited on 29/07/2024
Mettur Dam approaching full capacity
கோப்புப்படம்

கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை ஜூலை முதல் வாரத்தில் தொடங்கி தற்போது வரை விட்டு விட்டு கனமழை பொழிந்து வருகிறது. இதனால் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான மைசூர், குடகு, ஹாசன் உள்ளிட்ட பகுதிகளிலும் கடலோர மற்றும் மலை மாவட்டங்களிலும் தொடர்ந்து மழை பொழிவதால் கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அதன்படி கர்நாடகாவின் முக்கிய அணைகளான கிருஷ்ணராஜ சாகர் அணை மற்றும் கபினி, ஹேமாவதி உள்ளிட்ட அணைகளில் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. இதனால் தொடர்ந்து அதிகப்படியான உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது.

மேட்டூர் அணைக்குத் தொடர் நீர்வரத்து அதிகரித்து வருவதால் மேட்டூர் அணை நிரம்பும் கட்டத்தை நோக்கி வருகிறது. இந்நிலையில் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 1.55 லட்சம் கன அடியாக அதிகரித்துள்ளது. முன்னதாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1.51 லட்சம் கன அடியாக இருந்த நிலையில் தற்போது நீர்வரத்து 1.55 லட்சம் கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் 116 அடியைக் கடந்துள்ள மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியை நெருங்கி வருகிறது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இதனிடையே டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து நேற்று முதல் 12,000 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. இந்தச் சூழலில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 120 அடியை எட்டும் பட்சத்தில் இன்றைய தினமே உபரிநீர் வெளியேற்றப்பட வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.  அணை முழு கொள்ளளவையும் எட்டும் போது 16 கண் மதகுகள் வழியாக உபரிநீர் வெளியேற்றப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது. 

சார்ந்த செய்திகள்