Skip to main content

வெளியுறவுத்துறை அமைச்சக உயர் அதிகாரியுடன் துரை வைகோ எம்.பி சந்திப்பு

Published on 27/07/2024 | Edited on 27/07/2024
Meeting of Durai Vaiko MP with High Official of Ministry of External Affairs

தமிழக மீனவர்களின் பிரச்சனை தொடர்பான இரண்டு முக்கியக் கோரிக்கைகளுடன் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினரும், மதிமுக முதன்மைச் செயலாளருமான துரை வைகோ  (27.07.2024) சனிக்கிழமையன்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு நேரில் சென்று வெளியுறவுத்துறை அமைச்சருக்கு அடுத்த நிலையில் உள்ள வெளியுறவுத்துறைச் செயலாளரை சந்தித்தார்.

துரை வைகோ தமிழக மீனவர்களின் பிரச்சனை தொடர்பாக வெளியுறவுத்துறைச் செயலாளரிடம் கோரிக்கை மனு அளித்துவிட்டு அது தொடர்பாக கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் அவரிடம் விரிவாக கலந்துரையாடினார்.

துரை வைகோவின் கோரிக்கைகளை கவனமுடன் கேட்டுக் கொண்ட வெளியுறவுத்துறைச் செயலாளர் அவர்கள், தமிழக மீனவர்கள் பிரச்சனையில் உள்ள நீண்ட கால சிக்கலை எடுத்துக்கூறி அதில் சர்வதேச சட்டங்கள், இந்தியா இலங்கை இடையிலான பல்வேறு ஒப்பந்தங்கள் மற்றும் சீன நாட்டின் தலையீடு உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் இருப்பதால் இப்பிரச்சினையை கவனமுடன் கையாள வேண்டும். உங்களைப் போன்ற இளம் தலைவர்கள் மீனவர்கள் பிரச்சனையில் கவனம் செலுத்துவது வரவேற்கத்தக்கது. நீங்கள் அளித்துள்ள கோரிக்கைகளை கண்டிப்பாக பரிசீலிக்கிறோம் எனத் தெரிவித்து நீண்ட நேரம் கலந்துரையாடினார்.

துரை வைகோ வெளியுறவுத் துறை அமைச்சருக்கு அளித்த இரண்டு முக்கிய கோரிக்கைகள் பின்வருமாறு:

1. கடந்த ஜூலை 1 ஆம் தேதி நான்கு பாரம்பரிய படகுகள் மற்றும் நாட்டுப் படகுகளுடன் 25 தமிழக மீனவர்கள் எல்லைத் தாண்டியதாக கூறி இலங்கை கடற்படையினர் அவர்களை கைது செய்துள்ளார்கள். இயந்திரப் படகுகள் மூலம் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் மட்டுமே இதுவரை எல்லை தாண்டியதாக கைது செய்யப்பட்ட நிலையில், எந்த பாதிப்பும் இல்லாத நாட்டுப் படகுகளுடன் கடலுக்குச் சென்ற மீனவர்கள் கைது செய்யப்பட்டுவது இதுவே முதன்முறை ஆகும். கைது செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரும் ஏழ்மை நிலையில் உள்ளவர்கள். அதில் மூவருக்கு இருதயப் பிரச்சினை இருக்கின்றது. அகவே, இலங்கை கடற்படையின் பிடியில் உள்ள மீனவர்களை விடுவித்து அவர்களை தமிழகம் அழைத்து வரவும், மீண்டும் இதுபோன்ற பிரச்சனைகள் எழாமல் பார்த்துக் கொள்ளுமாறும் கேட்டுக் கொள்கிறேன்.

2. ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேர் கைது செய்யப்பட்டு அவர்களின் அவர்களின் இரண்டு படகுகள் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக, 02.07.2024 அன்று தமிழக முதல்வர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் எழுதிய கடிதத்தை தங்கள் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகின்றேன். அதில், கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 2024, இந்த ஆண்டு மட்டும் 250 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு உள்ளார்கள் என்ற கவலையளிக்கும் உண்மையையும் தெரிவித்து இருந்தார். மேலும், இவ்விவகாரத்தில் ஒன்றிய அரசு உடனடியாக தலையிட்டு 87 மீனவர்கள் மற்றும் 175 மீன்பிடி படகுகளை விடுவிக்க மாண்புமிகு வெளியுறவுத்துறை அமைச்சர் திரு. ஜெயசங்கர் அவர்களை தமிழக முதல்வர் வலியுறுத்தி இருந்தார். கடந்த 20 ஆண்டுகளில் இலங்கை கடற்படையினரால் 1175 மீன்பிடி படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாகவும், 6000 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும் நமது வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலை சுட்டிக் காட்ட விரும்புகின்றேன். 1974 இந்தியா இலங்கை இடையேயான கச்சத்தீவு ஒப்பந்த்ததின் 6 ஆவது அட்டவணையில் தமிழக மீனவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகளை வெளியுறவுத்துறை அமைச்சர் உறுதி செய்ய வேண்டும் எனவும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். மீன்பிடித் தொழில் மற்றும் கடலோர  மேலாண்மை தொடர்பான சட்டங்களில் ஒன்றிய அரசு அவ்வப்போது திருத்தங்களை மேற்கொண்டு வருகின்றது. இதற்கு மீனவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மாநில அரசின் உரிமைகளை பறிக்கும் வகையிலும், ஒன்றிய அரசிற்கு மேலும் அதிகாரத்தை கூட்டும் வகையிலும் சட்டங்கள் திருத்தப்படுவது மீனவர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும். உதாரணமாக, இந்தி பேச தெரியாத மீனவர்களை அதிகாரிகள் துன்புறுத்துகிறார்கள். கடுமையான சட்டத்திட்டங்களால் மீனவர்களின் வாழ்வாதாரமே கேள்குறியாகி விடும். ஆகவே, மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க ஒன்றிய அரசு உரிய சட்டத் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். தமிழக மீனவர்களுக்கான உரிமையை வழங்கும் கச்சத்தீவு ஒப்பந்ததை இலங்கை அரசு கடைபிடிப்பதை ஒன்றிய அரசு உறுதி செய்ய வேண்டும்.

இந்த சந்திப்பின்போது, தேசிய பாரம்பரிய மீனவர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சின்னத்தம்பி மற்றும் வழக்கறிஞர் பிரவீன் ஆகியோர் உடனிருந்தார்கள். மீனவர்களின் பிரதிநிதியாகச் சென்ற சின்னத்தம்பி அவர்களை ஒன்றிய வெளியுறவுத்துறைச் செயலாளரிடம் துரை வைகோ எம்.பி அவர்கள் அறிமுகம் செய்து வைத்தார். சின்னத்தம்பியும் தனது கோரிக்கையை வெளியுறவுத்துறைச் செயலாளரிடம் எடுத்துக் கூறினார்.

சார்ந்த செய்திகள்