சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் ஜவ்வரிசி உற்பத்தியாளர்கள், வியாபாரிகள், மரவள்ளி விவசாயிகள் மற்றும் கண்காணிப்புக் குழுக்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அமைச்சர் தா.மோ.அன்பரசன், அமைச்சர் கே.என்.நேரு கலந்துகொண்டு ஜவ்வரிசி உற்பத்தியாளர்கள், விவசாயிகள் போன்றோருடன் கலந்தாய்வு செய்து குறைகளைக் கேட்டறிந்தனர்.
கூட்டத்தில் பேசிய அமைச்சர் தா.மோ. அன்பரசன், “உணவுப் பொருளில் நஞ்சு கலந்து விஷம் கலந்து கொடுத்தால் எந்த அளவிற்கு மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதை நாங்கள் அறிந்துள்ளோம். இந்நிலையை எதிர்காலத்தில் யாரும் கடைப்பிடிக்கக் கூடாது. தரமான ஜவ்வரிசியைத் தயார் செய்ய வேண்டும். நீங்களும் நல்லா இருக்கனும். விவசாயிகளும் நல்லா இருக்கனும். அந்த நிலையை உருவாக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். இதில் சிக்கல் இல்லை ஏதும் பிரச்சனை என்றால் அதை நாங்கள் சரி செய்யத் தயாராக உள்ளோம்” எனக் கூறினார்.
இதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த தா.மோ. அன்பரசன், “நிறுவனத்தின் சார்பில் ஜவ்வரிசி தயாரிக்கும் தொழிற்சாலை நிறுவிட வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளார்கள். இது முதல்வரின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு வரும் காலங்களில் அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். நெடுநாளாக இந்தக் கூட்டம் கூட்டப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. அதன் பேரில் கூட்டப்பட்ட இக்கூட்டத்தில் அனைத்துத் தரப்பு அதிகாரிகள் கலந்து கொண்டனர். கலப்படம் செய்யும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.” என்றார்.