வங்கக் கடலில் உருவான மாண்டஸ் புயல் இன்று அதிகாலை மூன்று மணி அளவில் மாமல்லபுரம் அருகே கரையைக் கடந்த நிலையில், புயல் கரையைக் கடக்கும் போது பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் பல்வேறு இடங்களில் மரங்கள் வேரோடு சாலையில் சாய்ந்தன. கடலோரப் பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் கடல் நீர் உட்புகுந்ததால் மக்கள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகினர்.
தற்போது மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வரும் வேளையில், வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில், புயலின் போது வீசிய பலத்த காற்றால் சிறிய மரங்கள் முதல் பெரிய மரங்கள் வரை அங்குள்ள பல மரங்களின் கிளைகள் முறிந்தன. சில மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதனையடுத்து வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் வண்டலூர் பூங்காவிற்கு நேரில் சென்று பாதிப்படைந்த மரங்களைப் பார்வையிட்டு மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்த உத்தரவிட்டுள்ளார்.
புயலுக்கு முன்பாகவே பூங்காவில் உள்ள பணியாளர்கள், விலங்குகளின் இருப்பிடத்தில் உள்ள விழும் நிலையில் இருந்த மரங்களை அகற்றி இருந்ததால் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டதாகவும், தற்போது பராமரிப்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும், விலங்குகள் பாதுகாப்பாக உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.