சென்னை தேனாம்பேட்டையில் காத்தாடி விட்டபொழுது மாஞ்சா நூல் அறுந்து இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞரின் கழுத்தில் சிக்கியதில் கழுத்து அறுபட்டு அவரச சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஏற்கனவே முந்தைய காலங்களில் குறிப்பாக சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மாஞ்சா நூல் கழுத்தில் சிக்கி பலர் காயமடைந்த நிகழ்வுகள் நடந்திருந்தது. சில உயிரிழப்பு நிகழ்வுகளும் ஏற்பட்டுள்ளது. அதனையடுத்து மாஞ்சா நூல் விற்பனை மற்றும் காத்தாடி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டு, தேடி தேடி மாஞ்சா நூல்கள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் மீண்டும் இப்படி ஒரு விபத்து சம்பவம் சென்னையில் நிகழ்ந்துள்ளது.
சென்னை சாலிகிராமத்தை சேர்ந்த சரண் என்ற 33 வயது இளைஞர் தேனாம்பேட்டை பகுதியில் வேலையை முடித்துக்கொண்டு அவரது தோழி வந்தனா என்பவருடன் தேனாம்பேட்டை விஜயராகவா தெரு வழியாக இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்தார். அப்பொழுது கழுத்தில் மாஞ்சா நூல் கயிறு மாட்டி கீழே விழுந்துள்ளார். இதனால் சரணின் கழுத்து அறுபட்டது. நண்பனை காப்பாற்ற முயன்ற பெண் தோழி வந்தனா கையிலும் மாஞ்சா நூல் அறுத்து காயம் ஏற்பட்டது. உடனடியாக சரண் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், தற்பொழுது சரண் அப்பலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து தேனாம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.