மதுரையில் அரங்கேறும் இருசக்கர வாகன திருட்டும், அதனை தடுக்க முயன்ற பாதுகாப்பு பணியில் இருந்த பாதுகாவலரை, கொள்ளையர்கள் விரட்டி, விரட்டி வெட்ட முயன்ற சம்பவமும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாநகர், தெற்கு வாசல் காவல் நிலையத்திற்கு உட்பட்ட புகழ்பெற்ற திருமலை நாயக்கர் மகாலை சுற்றி இருக்கக்கூடிய பந்தடி தெருவில், கடந்த சில தினங்களாகவே வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்படும் இருசக்கர வாகனங்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
இதனால் அந்த பகுதி மக்கள் ஒன்றிணைந்து அனைவரும் வீட்டின் முன் பக்கம் சிசிடிவி கேமராக்கள் பொருத்தி உள்ளனர். இருப்பினும் திருட்டுச் சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருந்தது. இதனை தடுக்கும் விதமாக அனைவரும் ஒன்றிணைந்து இரவுநேர பாதுகாவலரே ஒருவரை நியமித்துள்ளனர். இந்த நிலையில் நேற்று அதிகாலை பாதுகாப்பு பணியில் இருந்தபோது அந்த பகுதியில் மர்ம நபர்கள் இருவர் இருசக்கர வாகனத்தை திருட முயன்றுள்ளனர்.
விரைந்து வந்த பாதுகாவலர் அவர்களை தடுத்து நிறுத்தி பிடிக்க முயன்றபோது, அவர்கள் மறைத்து வைத்திருந்த பயங்கர ஆயுதத்தால் பாதுகாவலரை விரட்டி, விரட்டி வெட்ட முயன்றனர். உயிருக்கு பயந்த பாதுகாவலர் தப்பியோடியுள்ளார். மேலும் திருடர்கள் சாவகாசமாக இருசக்கர வாகனத்தை திருடி சென்றுள்ளனர்.
உயிருக்கு பயந்து பாதுகாவலர் தப்பி ஓடும் காட்சியும் அவரை விரட்டிச் செல்லும் காட்சியும் அந்த பகுதியில் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது இந்த காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிகாலை நேரத்தில் மதுரை மாநகர் பகுதிகளில் நடந்த இந்த துணிகர கொள்ளைச் சம்பவம் மதுரை மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.