'மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் பணியில் தாமதம் ஏன்?' என்று தி.மு.க. கட்சியின் பொருளாளரும், அக்கட்சியின் மக்களவை குழுத் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான டி.ஆர்.பாலு மக்களவையில் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 29- ஆம் தேதி குடியரசுத்தலைவர் உரையுடன் தொடங்கிய நிலையில், மக்களவை மற்றும் மாநிலங்களவை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக, இன்று (12/02/2021) மாலை 04.00 மணிக்கு மக்களவை கூடியபோது அவையில் பேசிய தி.மு.க.வின் மக்களவை குழுத் தலைவர் டி.ஆர்.பாலு எம்.பி., "மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ரூபாய் 12 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் பணிகளை இன்னும் தொடங்காதது ஏன்?" என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு மக்களவையில் பதிலளித்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன், "மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க ரூபாய் 1,264 கோடி ஒதுக்கப்பட்டு, அதில் ரூபாய் 12 கோடி செலவிடப்பட்டுள்ளது. ஜப்பான் நிறுவனத்துடனான தாமதத்தால் எய்ம்ஸ் பணிகளைத் தொடர முடியவில்லை. பிரச்சனைகளைத் தீர்க்கும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது; விரைவில் எய்ம்ஸ் பணிகள் தொடங்கும்" என்றார்.