விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள முண்டியம்பாக்கத்தில் டாஸ்மாக் கடை ஒன்று இயங்கி வருகிறது. அந்தக் கடையில் நேற்று முன்தினம் இரவு சுமார் 8 மணி அளவில் கடையில் மேற்பார்வையாளரான ஜெயகாந்தன் விற்பனையாளர்கள் ஆறுமுகம், முருகன், பழனி, சீனிவாசன் ஆகியோர் விற்பனை முடிந்ததும் வழக்கம் போல் கடையைமூடி பூட்டிவிட்டுச் சென்றுள்ளனர்.
நேற்று காலையில் விற்பனையாளர் ஆறுமுகம், முருகன், பழனி, சீனிவாசன் ஆகியோர் கடையை திறந்தபோது கடையின் பின்பக்க சுவற்றில் துளையிடப்பட்டு இருந்துள்ளது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் அனைவரும் உடனடியாக மேற்பார்வையாளர் ஜெயகாந்தனுக்கு தகவல் அனுப்பி உள்ளனர். அவர் விக்கிரவாண்டி போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் முன்னிலையில் கடையில் இருந்த ஐந்து பெட்டி மதுபாட்டில்கள், ரூ.3,000 பணம் ஆகியவற்றை சரிபார்த்தபோது ஐந்து பெட்டி குவார்ட்டர் மதுபாட்டில்கள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்துள்ளது.
இதன் மொத்த மதிப்பு 36 ஆயிரம் ரூபாய் என போலீசார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து விக்கிரவாண்டி இன்ஸ்பெக்டர் விஜி, சப்-இன்ஸ்பெக்டர் ராஜாராமன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோர் சம்பவ இடத்திற்குசச் சென்று பார்வையிட்டு விற்பனையாளர்களிடம் விசாரணை நடத்தி உள்ளனர். மேலும் இதுசம்பந்தமாக கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்துச் சென்றுள்ளனர். இது சம்பந்தமாக விக்கிரவாண்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து கொள்ளையர்களை பிடிக்க தீவிரமாக தேடி வருகின்றனர்.