திருவண்ணாமலை மாவட்டத்தில் இரண்டு நாட்கள் பயணம் மேற்கொண்டுள்ள துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மாவட்டத்தின் வளர்ச்சி பணிகள் குறித்தும், கார்த்திகை தீபத்திற்கு செய்யப்பட வேண்டிய ஏற்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்து வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக கிரிவலப் பாதை மற்றும் கோயிலுக்கு உட்புறம் என பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் 36.4 கோடி மதிப்பிலான பணிகளை நேரில் ஆய்வு செய்தார். இதில் செங்கம் சாலையில் நுழைவாயில் அமைத்தல் தொடர்பாகவும், அருணகிரிநாதர் மணிமண்டபம் மேம்படுத்துதல் மற்றும் சுற்றுச்சுவர் அமைத்தல் பணி, ஆன்மீக அருங்காட்சியகம் அமைக்க சாத்தியக்கூறுகள் மற்றும் அமைத்தல் குறித்த ஆய்வு, பக்தர்கள் தங்கும் விடுதி அமைக்கும் பணி, சீனிவாசா பள்ளி அருகே கட்டப்பட்டு வரும் சுகாதார வளாகம் , பேவர் பிளாக் அமைக்கும் பணி உள்ளிட்டவற்றை ஆய்வு மேற்கொண்டார். நெடுஞ்சாலை துறை சார்பில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தமிழக அரசின் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை பிடித்து குடித்து ஆய்வு செய்தார்.
அப்போது அங்கு கூடியிருந்த மக்களை துணை முதல்வர் சந்தித்தபோது, தமிழக அரசு கொடுக்கும் ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமைத் தொகை எங்களுக்கு வரவில்லை என அடி அண்ணாமலை பகுதியை சேர்ந்த பொதுமக்கள் துணை முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்தனர். அதைகேட்டுக் கொண்டவர் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.
தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், கார்த்திகை தீப திருவிழா முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வுக்கூட்டம் துணை முதலமைச்சர் தலைமையில் நடைபெற்றது.
ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்து துணை முதலமைச்சர் கூறுகையில், ''பொதிகை டிவி நிகழ்ச்சியின் போது 'திராவிட நல் திருநாடும்' என்ற வார்த்தை இல்லாமல் தமிழ் தாய் வாழ்த்து பாடியது குறித்து கேட்டதற்கு,
சிலரை தவறாக குறிப்பிடக் கூடாது என்றும் சிலர், மனம் புண்படக் கூடாது என்பதற்க்காக தமிழ்தாய் வாழ்த்தில் கலைஞர் சில வார்த்தை நீக்கினார். ஆனால் ஆளுநர் தவறுதலாக நடந்ததாக சொன்னார்கள். இதற்காக மன்னிப்பு கேட்டதாகவும் செய்திகள் வாயிலாக அறிந்தேன். நடவடிக்கை எடுப்பதாக சொல்லி இருக்காங்க என்ன நடவடிக்கை எடுப்பாங்கனு பார்ப்போம். இதுகுறித்து முதல்வர் பதிலளிப்பார். இதில் நான் கருத்து கூறுவதற்கு ஒன்றுமில்லை'' எனக்கூறினார்.
தொடர்ந்து கார்த்திகை தீபத் திருவிழா குறித்து பேசுகையில், ''கார்த்திகை தீப திருத்தேர் அன்றைக்கு 6 லட்சம் பேரும், முக்கிய நிகழ்வான பரணி தீபம் அன்று 40 - 45 லட்சம் பேர் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக இன்று கள ஆய்வு நடைபெற்றது. பக்தர்களின் நன்மையை கருத்தில் கொண்டு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக முதல்வரின் உத்தரவின் பெயரில் எடுத்துள்ளோம்.
30 கோடி நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிரிவலப் பாதையை சுற்றி சுகாதாரம், குடிநீர், பாதுகாப்பு என பல்வேறு பணிகளை செய்து வருகிறோம். பக்தர்களின் பாதுகாப்புக்காக பல்வேறு இடங்களில் சிசிடிவி கேமராக்களை பொருத்தியுள்ளோம். முதலுதவி மையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது, அதேபோல் 400 நடமாடும் கழிவறைகளை அமைக்க உள்ளோம்.
கார்த்திகை தீபம் அன்று பக்தர்கள் பலர் அன்னதானம் வழங்குவார்கள் அந்த அன்னதான உணவின் தரத்தை ஆய்வு செய்வதற்காக தனி அதிகாரிகள் கொண்ட குழுவையும் நியமித்து உள்ளோம். கோவிலில் பல்வேறு புனரமைப்பு மேம்பாட்டுக்காக 37 கோடிக்கு மாஸ்டர் பிளானை முதல்வர் அறிவித்துள்ளார் மேற்குறிப்பிட்ட பணிகளை ஆறு மாதத்தில் முடிக்க திட்டமிட்டுள்ளோம். கூடுதலாக 5 கோடிக்கு கோபுர விளக்கு பொருத்த உள்ளோம். கார்த்திகை தீபம் அன்று பக்தர்கள் பாதுகாப்போடும் மகிழ்ச்சியோடும் வந்து செல்வதற்கு ஏதுவாக பக்தர்களுக்கு தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் செய்துள்ளோம்'' என்றார்.
திருவண்ணாமலை கோவிலில் இருந்த யானை இறந்த நிலையில் புதியதாக யானை வாங்கப்படுமா என்ற கேள்விக்கு, ''தனியார் யாராவது அவர்கள் வளர்த்து வரும் யானையை திருக்கோவிலுக்கு யானை தர ஒப்புக் கொண்டால் அதனை பெற்றுக் கொள்ள முடியும். அந்த யானையும் முறையான அனுமதி பெற்று இருக்க வேண்டும். தற்போது வனத்துறை சட்டத்தின் படி யானையை கொண்டு வரும் சூழல் இல்லை. கார்த்திகை தீபம் அன்று கோவிலில் உள்ள கடந்த ஆண்டு எந்த அளவுக்கு கூட்டம் இருந்ததோ அதே அளவுக்கு இந்த ஆண்டும் அனுமதிக்கப்படும். உள்ளே கூட்டத்தை கட்டுப்படுத்துவோம் முறையான ஏற்பாடுகள் செய்து கண்காணிக்கப்படும்''என்றார்.
கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் உபயதாரர்களுக்கு சிறப்பு பாஸ் வழங்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
இந்த ஆய்வின்போது இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.