வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகச் சென்னை உயர் நீதிமன்ற ஆவின் நுழைவு வாயில் முன்பு வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர். மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் 300 நாட்களுக்கு மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவளிக்கும் விதமாக இன்று பல்வேறு கட்சிகள் மற்றும் இயக்கங்கள் சார்பில் நாடு தழுவிய வேலை நிறுத்தம் நடைபெற்று வருகிறது.
இதற்கு ஆதரவளிக்கும் விதமாக, சென்னை உயர்நீதிமன்ற ஆவின் நுழைவு வாயில் முன்பு அகில இந்திய வழக்கறிஞர் சங்கம், ஜனநாயக வழக்கறிஞர் சங்கம் உட்பட பல்வேறு சங்கங்களைச் சார்ந்த வழக்கறிஞர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டியும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டியும் மத்திய அரசைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மேலும் ஜனநாயக வழக்கறிஞர் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும் என்றும் தமிழகத்தில் உச்ச நீதிமன்ற கிளை அமைக்கப்பட வேண்டும் என்றும் தமிழகத்தில் அனைத்து நீதி மன்றங்களிலும் உரியப் பாதுகாப்புடன் நேரடி விசாரணை துவங்க வேண்டும் என்றும் மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் ஆர்பாட்டம் நடை பெற்றது.