Skip to main content

கொடுங்கையூர் சிறுமியர் இருவர் பலி! இந்தச் சாவுகளுக்கு பழனிச்சாமி அரசைக் குற்றம்சாட்டும்: வேல்முருகன்

Published on 03/11/2017 | Edited on 03/11/2017
கொடுங்கையூர் சிறுமியர் இருவர் பலி! இந்தச் சாவுகளுக்கு பழனிச்சாமி அரசைக் குற்றம்சாட்டும்: வேல்முருகன்

தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மழை வெள்ள பாதிப்பினை எதிர்கொள்ள லண்டன், அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளையே மிஞ்சும் அளவுக்கு ஹைடெக் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்துள்ளது என்றனர் அமைச்சர்கள். ஆனால் அப்படிச் சொன்ன மறுநாளே அவை வெறும் வெற்று வார்த்தைகள் என்பது நிரூபணமாயிற்று.

தலைநகர் சென்னையின் கொடுங்கையூரில் இரண்டு சிறுமிகள் மின்சாரம் தாக்கி பலியாகினர். மின்கம்பத்தில் தரையைத் தொடும்படியாக அமைந்திருந்த மின்பெட்டி திறந்து கிடந்து அதிலிருந்து தொங்கிய வயர் தரையில் தண்ணீரில் மிதந்து கொண்டிருந்தது. இதனாலேயே அந்த சிறுமியர் இருவரும் மின்சாரம் தாக்கி பலியாகினர். அமைச்சர்கள் சொன்ன மழை வெள்ள பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் லட்சணம் இதன் மூலம் அம்பலமானது.

இத்தனைக்கும் பல முறை புகார் செய்தும், அறுந்து கிடந்த அந்த மின் வயரை சரிசெய்ய மின்பணியாளர்கள் யாருமே வரவில்லை. இதனால்தான் இந்த மரணங்கள்! மின் வயரைப் பொறுத்தவரை இப்படிக் கிடந்ததென்பது மற்ற வழக்கமான சமயங்களிலேயே நடக்கக்கூடாத ஒன்று. அப்படியிருக்க மழைக் காலத்தில் இப்படிக் கிடந்திருக்கிறது என்றால் அது மன்னிக்கவே முடியாத குற்றமாகும்.

இந்த சம்பவம் கடும் கண்டனத்திற்குள்ளாகவே, மின்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் சிலரை இடைநீக்கம் செய்திருக்கிறார்கள். அந்தச் சிறுமிகளின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டுத் தொகை அறிவித்திருக்கிறார்கள். இந்த இழப்பீட்டுத் தொகையை குறைந்தபட்சம் தலா ரூ.10 லட்சமாகவாவது வழங்கக் கோருகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி. இந்தச் சிறுமியர் இருவரின் செயற்கைச் சாவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி! இந்தச் சாவுகளுக்கு பழனிச்சாமி அரசைக் குற்றம்சாட்டும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி, இதுபோல் இனி நடக்காது உறுதி செய்ய வலியுறுத்துகிறது.”

சார்ந்த செய்திகள்