நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அடுத்துள்ள கொடநாடு பகுதியில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான பங்களாவில் கொலை மற்றும் கொள்ளைச் சம்பவம் நடைபெற்றிருந்தது. இந்தச் சம்பவத்தில் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ், வாளையார் மனோஜ், சயான் உள்ளிட்ட 11 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதற்கிடையில், ஓட்டுநர் கனகராஜ் வாகன விபத்தில் உயிரிழந்த நிலையில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
கடந்த ஒரு ஆண்டாக இந்த வழக்கு சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக குற்றம் நடைபெற்ற கொடநாடு எஸ்டேட்டில் சில நாட்களுக்கு முன்பு சிபிசிஐடி போலீசார் தலைமையில் நிபுணர் குழு ஒன்று ஆய்வு செய்வதற்கு உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் உதகையில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு மீண்டும் கொடநாடு வழக்கு விசாரணைக்கு வந்தது. நிபுணர் குழு அறிக்கையின் நகலை தங்களுக்கு வழங்க வேண்டும் எனக் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இது குறித்து முடிவெடுப்பதற்கு அரசு தரப்பு கால அவகாசம் கோரியது. இதனைத் தொடர்ந்து வழக்கு ஜூன் 21 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
மேலும் கொடநாடு எஸ்டேட்டில் நீண்ட காலமாக ஓட்டுநராக பணியாற்றி வரும் ரமேஷ், ஜெயலலிதா கொடநாடு வரும் போதெல்லாம் அவருக்கு காய்கறிகள் வாங்கிக் கொடுக்கும் தேவன், கோவையைச் சேர்ந்த ரவிக்குமார் மற்றும் அப்துல் காதர் ஆகிய நான்கு பேருக்கும் சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். சம்மன் அனுப்பப்பட்டுள்ள நான்கு பேரும் நாளை கோவையில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் நேரில் ஆஜராகும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.