“திமுக ஆட்சியில் பெண்களுக்கு எந்த பாதுகாப்பும் இல்லை” என்று பாஜக பிரமுகரும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு தெரிவித்துள்ளார்.
கோவில்களைச் சுத்தம் செய்ய வேண்டும் என்ற பிரதமர் மோடியின் அறிவுறுத்தலுக்கு ஏற்ப, சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள ஆதிகேசவ பெருமாள் கோவிலில் தூய்மைப் பணியினை மேற்கொண்டிருந்தார் குஷ்பு. அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த குஷ்பு, “திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை; விழுப்புரத்தில் 10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகளிடம் பள்ளியின் ஆசிரியர் ஒருவேரே தவறாக நடந்துகொண்டார். வழக்கு கூட பதிவு செய்யாமல் இருந்தார்கள். பின்பு வழக்கை பதிவு செய்த பிறகு வாபஸ் வாங்க வேண்டும் என்று மிரட்டி வருகின்றனர். திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்காது என்று மக்கள் அனைவருக்கும் தெரியும். திமுக எம்.எல்.ஏ வீட்டில் பெண் ஒருவருக்கு கொடுமை நடந்திருக்கிறது. ஆனால் முதல்வர் ஸ்டாலின் இது குறித்து எதுவும் பேசவில்லை.
மாறாக என்ன நடந்தாலும் நடக்கட்டும் போலீஸ் நம் கையில்தான இருக்கிறது. எதுவாக இருந்தாலும் பார்த்துக்கொள்ளலாம் என்று இருக்கிறார். முதல்வர் வெளியே வந்து பெண்களுக்கு ஆதரவாக பேசி நான் இதுவரை பார்த்தது கிடையாது. எம்.எல்.ஏ மருமகள் விவகாரத்தில் பாதிக்கப்பட்டிருக்கும் பெண் சிறுமி என்பதால் மகளிர் ஆணையத்தில் வராது. போக்சோவில்தான் வரும். அதனால் எங்களால் ஒன்றும் செய்ய முடியாது.” என்றார்.