திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் உலகளாவிய சுற்றுலாத்தலமாக விளங்குகிறது. இயற்கை எழில் கொஞ்சும் இவ்வூரினை ரசிப்பதற்கு சுற்றுலாப் பயணிகள் பல்வேறு பகுதியிலிருந்து வருவது வழக்கம்.
அந்த வகையில், கேரள மாநிலம், மலப்புரம் பகுதியில் இருந்து நான்கு வாலிபர்கள் கொடைக்கானலில் உள்ள இயற்கை கண்டு ரசிப்பதற்கும், குளுகுளு காலநிலையை அனுபவிப்பதற்காகவும் சுற்றுலாவுக்கு வந்துள்ளனர். சுற்றுலா வந்த நான்கு வாலிபர்கள் கொண்ட குழுவில் இடம்பெற்ற மலப்புரத்தைச் சேர்ந்த சையது அலி மகன் 23 வயதான நாஜி என்பவர், கொடைக்கானல் அருகே உள்ள கூக்கால் பகுதியில் அறை எடுத்து தனது நண்பர்களுடன் தங்கியுள்ளார்.
இரண்டு நாள் சுற்றுலாவைச் சிறப்பாகக் கொண்டாடிய அந்த நான்கு வாலிபர்கள் மீண்டும் தங்களுடைய சொந்த ஊரான கேரளாவிற்கு கிளம்பியுள்ளனர். அப்போது, நாஜி நண்பர்களுடன் சேர்ந்து போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. ஒருகட்டத்தில் போதை தலைக்கேற நாஜி தன்னையறியாமல் நடந்துகொண்டுள்ளார். இதில், நாஜிக்கு காயம் ஏற்பட அவரை மீட்ட, அவரின் நண்பர்கள் கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது, தலைக்கேறிய போதையில் காரை விட்டு திடீரென கீழே இறங்கிய நாஜி மகப்பேறு மருத்துவமனை அருகே இருந்த ஜன்னல் கண்ணாடியை உடைத்துள்ளார்.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த மருத்துவ ஊழியர்கள் மற்றும் நோயாளிகள் அலறியுள்ளனர். ஆனால், போதையில் இருந்த நாஜி திடீரென உடைந்த கண்ணாடி துண்டுகளை எடுத்து தன்னையே தாக்கிக்குக் கொண்டு விபரீத முயற்சி எடுத்துள்ளார். இதனால், பதறிப்போன நாஜியின் நண்பர்கள், உடனே நாஜியை மீட்டு தீவிர சிகிச்சைப் பிரிவுக்குக் கொண்டு போய் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு நாஜி மாற்றப்பட்டதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கொடைக்கானல் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, நாஜி தலைக்கேறிய மதுபோதையில் விபரீத முயற்சி எடுத்ததாகக் கூறப்படும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் தலைக்கேறிய போதையில் இருந்ததாக கூறப்படும் கேரளா வாலிபர் கண்ணாடியை உடைத்து விபரீத முயற்சி எடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.