கர்நாடக மாநில துணை முதல்வரும் நீர்ப்பாசனத் துறை அமைச்சருமான டி.கே.சிவகுமார் தமிழகத்திற்கு காவிரி நீரை தர முடியாது, மேகதாது அணையை கட்டியே தீருவோம் என்று சமீபத்தில் தெரிவித்து இருந்தார். இவரின் இந்த கருத்துக்கு தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
தொடர்ந்து காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக நேற்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதையடுத்து இன்று அமைச்சர் துரைமுருகன் டெல்லி சென்று ஒன்றிய ஜல் சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங்கை சந்தித்து இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
இந்நிலையில், தமிழக அரசின் சார்பில் நீர்வளத்துறை செயலாளர் சக்சேனா காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்திற்கு கடிதம் எழுதி இருக்கிறார். அந்த கடிதத்தில், “தமிழகத்திற்கு ஜூன் மாதம் 9.20 டிஎம்சி தண்ணீரும், ஜூலை மாதத்தில் 31.24 டிஎம்சி தண்ணீரும் கர்நாடக அரசு வழங்க வேண்டும். ஆனால் ஜூன் மாதத்தில் வெறும் 2.7 டிஎம்சி தண்ணீர் மட்டுமே திறந்துவிடப்பட்டுள்ளது. காவிரியிலிருந்து ஜூலை மாதம் திறக்க வேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு தமிழகத்திற்கு திறந்து விட வேண்டும். காவிரி நதிநீரில் தமிழகத்தின் உரிமையை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும்” என வலியுறுத்தப்பட்டுள்ளது.