வேலூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் எம்பி கதிர் ஆனந்த் 2,15,702 வாக்குகள் முன்னிலையில் வெற்றி பெற்றார். வேலூர் பாராளுமன்ற தொகுதியில் உள்ள ஆறு சட்டமன்றத் தொகுதிகளில் வாணியம்பாடி சட்டமன்றத் தொகுதியில் அதிகபட்சமாக 103364 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.
இந்நிலையில் வாணியம்பாடி நகரப் பகுதிகளில் நன்றி தெரிவிக்க வந்திருந்த எம்பி கதிர் ஆனந்த் வாணியம்பாடி பெரிய பேட்டை பகுதியில் உள்ள அழகு பெருமாள் ஆலயத்தில் கோ பூஜை செய்து வழிபாடு நடத்தி பின்னர் அருகில் இருந்த தர்காவிற்கும் சென்று பிரார்த்தனை செய்தார்.
பின்னர் பேசிய கதிர் ஆனந்த், வேலூர் பாராளுமன்ற தொகுதி சுதந்திரம் பெற்ற நாள் முதலாய் இதுவரை யாரும் வெற்றி பெறாத வகையில் அதிகபட்ச வாக்குகளை அளித்து என்னை வெற்றி பெற செய்துள்ளனர். இதில் அதிகபட்சமாக வாணியம்பாடி மக்கள் அதிகப்படியான வாக்குகளை அள்ளித் தந்து என்னை வெற்றி பெற செய்துள்ளனர். என்னை இனி காட்பாடி கதிர ஆனந்த் என்று அழைக்காமல் வாணியம்பாடி கதிர் ஆனந்த் என்றே அழைக்கலாம் அந்த அளவுக்கு வாணியம்பாடி மக்களுக்கு என் மீது உரிமை உள்ளது எனவும், எனது அனைத்து வாக்குறுதிகளையும் நிச்சயம் நிறைவேற்றுவேன் எனவும் பொது மக்களிடையே திறந்தவெளியில் நின்று நன்றி தெரிவித்தார்.
பின்னர் வாணியம்பாடி பேருந்து நிலையம், கோனாமேடு, பெருமாள் பேட்டை, நியூடவுன், உள்ளிட்ட பகுதிகளில் வீதி வீதியாக சென்று பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்தார்.