கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் அடுத்துள்ள நடையனூர் பகுதியைச் சார்ந்தவர் விஜயலட்சுமி(28). பொறியியல் பட்டம் பெற்ற இவர் பெங்களூரில் தனியார் ஐடி கம்பெனியில் பணிபுரிந்துள்ளார். இவருக்கு ஆங்கில மற்றும் கொரியன் மொழி தெரிந்துள்ளதால் ஆன்லைனில் தனது தொழில் சம்பந்தமாக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். அப்போது தென் கொரிய நாடு டோங்யோங் பகுதியைச் சார்ந்த மின்ஜுன் கிம் (28) உடன் வலைத்தளம் மூலம் பேச ஆரம்பித்துள்ளார்.
இவர் கிஸ்ட் பல்கலைக்கழகத்தில் வேதியல் துறையில் பட்டம் பெற்றுள்ளார். இவர் கொரிய நாட்டில் உள்ள தனியார் ஐடி துறையில் பணிபுரிந்து வருகிறார். கடந்த ஓராண்டாக ஆன்லைன் மூலம் பேசி வந்த அவர்கள் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. கடந்த மார்ச் மாதம் நேரில் காண்பதற்காக தென் கொரியா சென்ற பெண்மணி மின்ஜுன் கிம் குடும்பத்தை நேரில் சந்தித்து பேசியதில் திருமணத்திற்கு ஒப்புக்கொண்டனர். அதேபோன்று பெண் வீட்டார் சார்பிலும் ஒப்புக்கொண்டனர்.
இந்த நிலையில் இரு விட்டார்கள் சம்மதத்துடன் திருமணம் தமிழ்நாட்டில் வைத்துக் கொள்ளலாம் என்று முடிவெடுத்தனர். பெண் வீட்டார் திருமணம் பத்திரிகை அடித்து 19.05.2024 தேதி கல்யாணம் நிச்சயிக்கப்பட்டு அவர்களது உறவினர்களுக்கு வழங்கினர். தென் கொரியா நாட்டைச் சார்ந்த மின்ஜுன் கிம் குடும்பத்தினர் தாய் தந்தை அவரது நண்பர் உட்பட நான்கு நபர்கள் கடந்த வாரம் தமிழ்நாடு வந்தனர்.
வேலாயுதம்பாளையம் அடுத்துள்ள கோம்புபாளையம் பெருமாள் கோவிலில் இரு வீட்டார் முன்னிலையில் தமிழ் முறைப்படி உறவினர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர். கிராம பகுதியில் முதல் முறையாக இது போன்ற திருமணம் நடைபெற்றதால் கொரியா நாட்டைச் சார்ந்த மணமகனை அப்பகுதி பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர்.
குறிப்பாக நேற்று இரவு நிச்சயதார்த்தம் நடைபெற்ற போது புதுமண தம்பதிகள் குழந்தைகளுடன் இணைந்து உற்சாகமாக நடனமாடி தங்களது சந்தோஷங்களை வெளிப்படுத்தினர். திருமணம் செய்து கொண்ட இருவரும் மணமகன் குடும்பத்தாருடன் தென் கொரியா நாட்டிற்கு செல்ல உள்ளனர். மேலும் அங்கு விஜயலட்சுமி தற்போது சுற்றுலா விசா மூலம் சென்ற பிறகு நிரந்தர விசா பெறுவதற்கு தேர்வு எழுத உள்ளதாக கூறினார்.