தெருமக்கள் பாசமாக வளர்த்து வந்த நாயை சுட்டுக் கொன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நாயை கொன்ற கொலையாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போராடியதும் விசாரணையில் இறங்கிய காவல்துறை 3 பேர் மீது வழக்கு பதிவு செய்தது. தங்களை பாதுகாத்த நாய்க்கு பிரியாவிடை கொடுத்த மக்களின் அழுகுரலுடன் நாயின் சடலம் எடுத்து செல்லப்பட்டது. இந்த சம்பவம் கரூர் பகுதியில் பெரிய பாச போராட்டத்தையே ஏற்படுத்தியுள்ளது.
கரூர் அடுத்த வெங்கமேடு பகுதியில் உள்ள கணக்குப்பிள்ளை தெருவில், ரமேஷ் என்கின்ற ஒரு நாயை, அதே பகுதியில் சின்னத்தம்பி என்பவர் வளர்த்து வரும் நிலையில், அந்த தெருவில் அனைவரது வீட்டில் நன்கு பழகிய நிலையில், அனைவருக்கும் அந்த நாய் பழக்கமாகியுள்ளது. இந்நிலையில் இரவு நேரத்தில் திருடர்களை அண்டவிடமால், வந்த வழியே துரத்தும், இந்த நல்லகுணம் குண்ட நாயை அதிகம் நேசிப்பவர்கள் தான் அதிகம், இந்நிலையில், அதே பகுதியை சார்ந்த, ஒருவர் கரூர் நகராட்சியிடம் புகார் அளித்தும், அது அடிக்கடி குழைப்பதாக கூறிய நிலையில் இன்று அந்த நாயினை நகராட்சி ஊழியர்கள் வேட்டை துப்பாக்கியை கொண்டு சுட்டுக் கொன்றுள்ளனர்.
ஆசை, ஆசையாய் வளர்த்த நாயினை சுட்டுக் கொன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், பாசமாய் பழகிய நாயை கொல்ல தூண்டியவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கூறி அந்த பகுதி மக்கள் திடீரென்று குப்பை லாரிகளை மறித்தும், சாலை மறியலிலும் ஈடுபட்டனர். மேலும், இந்த சம்பவத்தினால் அந்த பகுதி வழியாக செல்லும் பள்ளி கல்லூரி வாகன பேருந்துகள் வரிசை கட்டி நின்றன.
பின்பு காவல்துறையினரும், அ.தி.மு.க நிர்வாகிகளும் வந்து மக்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்திய பின்பு நாயின் சடலம் எடுக்கப்பட்டு, பின்னர் கலைந்து சென்றனர். இந்த காலத்தில் மனிதனை தாக்கி விட்டு சென்றாலே, கண்டு கொள்ளாத உலகில், நாய் மீது கொண்ட பாசத்தினால், நாயை சுட்டுக்கொன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கூடிய சுமார் 100 க்கும் மேற்பட்டவர்கள் நடத்திய சாலை மறியல் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
இது குறித்து அந்த பகுதி மக்கள் கூறுகையில், இந்த நாய் இருக்கிற வரைக்கும் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. திருட்டு பயமும் இல்லாமல் இருந்தது. இது வரை நாங்கள் திருட்டு பிரச்சனைக்காகவும், எங்கள் பாதுகாப்புக்காவும் நாங்க போலீஸ் ஸ்டேஷன் வாசலை மிதித்தது இல்லை. ஆனால் முதல்முறையாக அவனோட இறப்புக்கு நியாயம் கேட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு போயிருக்கோம் என்றார்கள்.
இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணியன் நகராட்சி ஊழியர் வேலுச்சாமி மற்றும் ரமேஷ் ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் ரமேஷ் வைத்திருந்த நாட்டு துப்பாக்கியை போலீசார் பறிமுதல் செய்தனர்